‘ரெட்ட தல’  –  (விமர்சனம்.) பொம்மை!

அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ரெட்ட தல. எழுதி இயக்கியிருக்கிறார். கிரிஷ் திருக்குமரன். ‘பி டி ஜி யுனிவர்சல்’ நிறுவனத்தின் சார்பில், பாபி பாலசந்திரன் தயாரித்திருக்கிறார்.

அருண் விஜய், ஸ்டைலிஷாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும், இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை, இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் நிறைவேற்றிருக்கிறாரா?

பாண்டிச்சேரியில், பெற்றோர்கள் இல்லாத நிலையில் ஆதரவற்ற காளி ( அருண் விஜய்) , ஆந்த்ரே ( சித்தி இத்னானி) இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வளருகின்றனர். காளிக்கு ஆந்த்ரே மீது தீராக்காதல். ஆனால், ஆந்த்ரேவுக்கோ பணத்தின் மீதும், வசதியான வாழ்க்கை மீதும் அதீத ஈடுபாடு கொண்டிருப்பதோடு, அவரது காதலை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், கோவாவில் வசிக்கும் பெரும் பணக்காரர் உபேந்திராவும் (அருண் விஜய்), காளியும் சந்திக்க நேர்கிறது. இருவரும் நட்பாக பழகுகின்றனர்.

ஆந்த்ரேவின் திட்டப்படி, காளி, உபேந்திராவை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார். இவர்கள் திட்டமிடுவதை போல், உபேந்திரா, காளியை கொல்ல திட்டமிடுகிறார். காளி, உபேந்திரா இருவரும் யார்? கொலையானவர் யார்? என்பதை, பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.

படம் ஆரம்பமானவுடன், மெதுவான வேகத்தில் நகர்கிறது. அதன் பிறகு, காளியும், உபேந்திராவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிக்குப் பிறகு வேகமாக நகர்கிறது. அதேவேகத்தில், ஆங்காங்கே தொய்வும் ஏற்படுகிறது. தொய்வு ஏற்படும் காட்சிகளை, தன்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் மூலம் தாங்கிப்பிடிக்கிறார், அருண் விஜய். ஆக்‌ஷன் காட்சிகளில் தனது கடுமையான உழைப்பை கொட்டி நடித்திருப்பது, நன்கு தெரிகிறது. படத்தில் இடம்பெறும்  இரண்டு டிவிஸ்ட்டுகள் சிறப்பாக இருக்கிறது. லாஜிக்கை முற்றிலும் மறந்து, மேஜிக் செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு தோல்வியே ஏற்பட்டிருக்கிறது. பலவீனமான திரைக்கதை, நடிகர் நடிகைகளின் நடிப்பினை வீணடித்துள்ளது. அதோடு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிக மோசம்!பெரும்பாலும் இரவிலேயே காட்சிகள் அலைவதால் அவைகளை ரசிப்பதில் நமக்கு பிரச்னை வருகிறது 

ஆந்த்ரே, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி. அழகான அந்த பெண்ணை இருள் சூழ்ந்து கிடப்பதால்  வெறும் பதுமையாகவே இருக்கிறார்.  அவரைப்பற்றி குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.

பாண்டிச்சேரி இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கம்போல் மெண்டல் மேனரிசங்கள் . எரிச்சல்!!!.தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி,  பாலாஜி முருகதாஸ் போன்றோரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

டிஜோ டாமியின் ஓளிப்பதிவு, ஸ்டைலிஷாக இருக்கிறது. சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் பாடியிருக்கும் ‘கண்ணம்மா’ ஓகே. பின்னணி இசை, பல இடங்களில் காட்சிகளில் வசனங்களை கேட்கவிடாமல் அமுக்கி விடுகிறது. ,

இயக்குநர் கிரிஷ் திருக்குமரன், கதை சொல்ல முடியாமல் திணறியிருப்பதைப்போல, படத்தொகுப்பு செய்திருக்கும் ஆண்டனியும், கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.

செலவு செய்ய நல்ல தயாரிப்பாளர், நன்றாக நடிக்கத் தெரிந்த அருண்விஜய் உள்ளிட்ட நடிகர்கள், சிறந்த தொழில் நுட்பக்கலைஞர்கள் கிடைத்தும், நல்ல திரைக்கதை அமைக்க முடியாமல் திணறியிருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கும் கிரிஷ் திருக்குமரன்.

‘ரெட்ட தல’  –  பொம்மை!