பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி (வயது 72) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட படத் தயாரிப்பாளர் ஆர் பி.சவுத்ரி (வயது 72) ரத்தன்லால் பகத்ராம் சவுத்ரி ஆகும்.இவர் தமிழில் புதுவசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்ய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், சமுத்திரம், நீ வருவாய் என, திருப்பாச்சி உள்ளிட்ட 98 திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது 99வது படமாக விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ என்ற படத்தை தயாரித்து வந்தார். தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.எழில், இராஜகுமாரன், சசி, பாலசேகரன், பிருந்தா சாரதி, எஸ்.ரவிமரியா உள்பட 34 இயக்குனர்களையும், பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது முதல் மகன் சுரேஷ் தயாரிப்பு நிறுவனம் பணிகளை பார்த்து வருகிறார். இரண்டாவது மகனான ஜீவன் ‘ஸ்டீல் தொழிற்சாலை’ நடத்தி வருகிறார். இன்னொரு மகனான ரமேஷ் ‘ஜித்தன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்காவது மகனான நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், பிரபல பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி தனது பூர்வீக ஊரான ராஜஸ்தானின் உதய்பூருக்கு சென்றபோது ஜோத்பூர் அருகே , எதிரே வந்த லாரி மோதியதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பயங்கரமாக மோதியது.இதில், காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆர்.பி. சவுத்ரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் ராஐஸ்தானில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு சென்னை கொண்டு வரப்பட்டு, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது ஆர்.பி.சவுத்ரியின் மரணம், தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அவரது மறைவுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும், நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், சிரஞ்சீவி,விஷால்,ராகவா லாரன்ஸ், சந்தானம், சதிஷ் ,ராமராஜன் இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், டி ராஜேந்தர், நடிகை குஷ்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன ஆர்.பி சவுத்ரியின் இறுதி சடங்கு சென்னையில் நாளை காலை நடக்கிறது












