இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஷிவா நிர்வாணா எழுத்து மற்றும் இயக்கத்தில், ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. பக்தி மற்றும் தந்தை-மகள் பாசத்தை மையமாகக் கொண்டு, தற்காலச் சமூகத்தின் மிக முக்கியமான விழிப்புணர்வுச் செய்தியை இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது.
ஒரு தனித்துவமான பிளாஷ்பேக் உத்தியுடன் கதை தொடங்குகிறது. தனது ஒரே செல்ல மகள் உறங்கிக் கொண்டிருப்பதால், சாலையில் செல்லும் வாகனங்கள் கூட ஹாரன் ஒலிக்கக் கூடாது என்று ஆள் வைத்து அமைதியைப் பேணுகிறார் நாயகன் திரிநாத் (ரவி தேஜா). அந்த விதியை மீறி ஹாரன் அடித்து வரும் ஒரு லாரி ஓட்டுநரை அவர் ஆக்ரோஷமாக அடித்துத் துவம்சம் செய்கிறார். அந்த மகளின் தூக்கத்திற்குப் பின்னணியில் இருக்கும் விபரீதம் என்ன என்பதை நோக்கியே கதையின் பிளாஷ்பேக் காட்சிகள் உணர்ச்சி மிகுந்த பயணமாக விரிகின்றன.
ஆத்தூர் என்கிற கிராமத்தில், தனது மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்) மற்றும் மகள் மணிகண்டா (பேபி நட்சத்திரா) ஆகியோருடன் வசித்து வரும் திரிநாத், ஒரு சில ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்து வியாபாரம் நடத்தி வருகிறார். அவர் தீவிர குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் அந்தப் பாத்திரத்திற்குத் தகுந்தவாறு கிறங்கிய விழிகள், மிரட்டும் கோபம் என அச்சு அசலாக ஒரு குடிகாரனாகக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
குடிகாரனாக இருந்தாலும் தனது குடும்பத்தின் மீது அளவற்ற அன்பைச் செலுத்தும் அவர், சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்ததும் தனது குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்துகிறார். தன் மகள் மணிகண்டாவிற்குச் சிறு வயது முதலே சமுதாயத்தில் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார். பெண்கள் வெளியே பகிர்ந்து கொள்ளத் தயங்கும், அஞ்சும் விஷயங்களைத் தைரியமாகப் பெற்றவரிடம் சொல்ல வேண்டும் என்று அவர் வளர்க்க, அவரது மனைவியோ கணவனின் கோபத்திற்கு அஞ்சிச் சச்சரவுகளைப் பெரிதாக்காத பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில், அந்த கிராமத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சில பள்ளிக் குழந்தைகள் அதை வெளியே சொல்லத் தயங்கிய போது, துணிச்சலாக வளர்ந்த மணிகண்டா இவ்விவரங்களைத் தன் தந்தையிடம் தைரியமாகக் கூறுகிறாள். அதைத் தொடர்ந்து, அந்தப் பாலியல் குற்றவாளிகளை நோக்கித் திரிநாத் எப்படி வெகுண்டெழுந்து வேட்டையாடுகிறார் என்பதுதான் ‘இருமுடி கட்டு’ படத்தின் மீதிக்கதை.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரவி தேஜா, குடிகாரத் தந்தையாகவும், அநீதியைக் கண்டு ஆக்ரோஷமாக மாறும் ஐயப்ப சாமியாகவும் தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்புப் பாவனைகள் மூலம் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரவி தேஜாவின் மனைவி காவேரியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், ஓர் அன்பான, அடக்கமான குடும்பத் தலைவியாகவும், பிரச்சினைகளைத் தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளும் சாது மனைவியாகவும் இயல்பாக நடித்துப் பாராட்டுப் பெறுகிறார்.

இவர்களுடன் ஐயப்பன் கோவில் செல்லும் குருசாமியாக மூத்த நடிகர் சாய்குமார் நடித்துள்ளார். அவர் தனது பாந்தமான தோற்றத்தின் மூலமும், அன்பான நடவடிக்கைகள் மூலமும் பார்ப்போர் மனதில் பவ்யமாக அமர்ந்து கொள்கிறார். இப்படத்தில் ‘மணிகண்டா’ பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி நட்சத்திரா, துறுதுறுப்பான பேசும் விழிகள் மற்றும் துடிதுடிப்பான குணச்சித்திரத்தால், அந்தப் பாத்திரத்தை நம் பக்கத்து வீட்டுக் குழந்தை போல உணர வைக்கிறார். தந்தை குடிப்பதை அவர் விருப்பம் என்று முதலில் அனுமதிக்கும் அந்தக் குழந்தை, பிறகு ‘குடிக்க வேண்டாம்’ என்று சொல்லும்போது, மகளுக்காகத் தந்தையும் குடியை விடும் காட்சிகள் எமோஷனல் வெயிட்டைக் கூட்டுகிறது.
இப்படத்தில் அஜய் கோஷ் பிரதான வில்லனாக நடிக்க, அவரைச் சார்ந்து பல்வேறு வில்லன் முகங்கள் தென்படுகின்றன. ‘நூறு சாமி’ படத்தில் பாந்தமாக வந்த ஸ்வாசிகா, இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துப் பார்ப்பவர்களின் எரிச்சலை ஏகோபித்த முறையில் அள்ளிக் கொள்கிறார். இருப்பினும், படத்தின் பிற்பாதியில் அதிர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பக்தி வழியில் நேர்மையாக இருக்கும் ‘குருசாமி’ சாய்குமார் போன்ற நல்ல பாத்திரங்களைக் கொலைகாரர்களாகவும், எதிர்நிலையாகவும் மாற்றி இருப்பது சற்று உறுத்துகிறது.
பக்கவாத்தியங்களின் இரைச்சலோ, தேவையற்ற காட்சிகளோ இன்றி, கதையின் சில யூகிக்க வைக்கும் காட்சிகளைத் தொய்வில்லாமல் பக்காவாக எடிட் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரவீன் புடி. ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, படம் முழுக்கப் பெருந்திரளான கூட்டங்கள் நிறைந்திருக்கும் பக்திப் பின்னணிக் காட்சிகளை மிகவும் வண்ணமயமாகப் படம்பிடித்துள்ளார். அனல் அரசு மற்றும் ரியல் சதீஷ் மாஸ்டர்களின் வீரியம் மிக்க சண்டைக் காட்சிகளிலும் அவரது கேமரா சுழன்று சுழன்று காட்சிகளை மாஸாகப் பதிவு செய்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு வணிக ரீதியிலான படத்தை அடுத்த லெவலுக்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. ஐயப்பன் பாடல்களையும் பக்திரசம் வழிய வழிய, அதே சமயம் துள்ளலோடும் எழுச்சியோடும் அக்மார்க் ஹிட் ரகமாக உருவாக்கியுள்ளார். குறிப்பாக, ‘கட்டு கட்டு இருமுடி கட்டு’, ‘மல்லிப்பூ பல்லக்கில்’, மற்றும் ‘தேவதையே தேவதையே’ போன்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கும் ரகமாக அமைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஒரு முழுமையான ‘செண்டிமெண்ட் பேக்கேஜ்’ ஆகும். படத்தின் பெரும்பகுதி ஐயப்ப சாமி பூஜைகள், வழிபாடு, விழாக்கோலம் மற்றும் மலைப்பயணம் என்று பக்தியை ஒரு கொண்டாட்ட மனநிலையாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட அதிரடியும் பாசமும் கலந்த மசாலா கலவை ஆந்திரா பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தமிழ்நாட்டு ஆடியன்ஸுக்கு இந்தக் கலவையின் காரம் (அதீத செண்டிமெண்ட்) சற்று அதிகமாக உணரப்படலாம்.
இருப்பினும், பக்தியும் பாசமும் சரிவிகிதத்தில் கலந்து நிறைந்துள்ள இந்தத் திரைப்படம், பெண் குழந்தைகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுச் செய்தியைச் சொல்வதால், குறிப்பாகப் பெண் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் வகையில் மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது.