தமிழ் திரையுலகில் அண்மைக்காலமாக வெளியாகும் சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கு மத்தியில், அமானுஷ்யக் கூறுகளுடன் கூடிய ஒரு புலனாய்வுக் கதையாகப் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது ‘தி டார்க் ஹெவன்’.
இரு மாநில எல்லைப் பகுதியான தமிழக-கேரள மலைக் கிராமங்களின் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் தொன்றுதொட்டு நிலவி வரும் ஆயிரம் ஆண்டுகால ஒரு சம்பவத்தின் காரணமாக, ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஆண்டின் ஏழாவது மாதத்தில், அங்குள்ள ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது வழக்கமாக உள்ளது. இது அந்த ஊர் மக்களின் மத்தியில் ஒரு தெய்வீகச் சாபமாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய பதற்றமான காலகட்டத்தில், அந்தப் பகுதிக்கு புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் சித்து, தனது குடும்பத்துடன் அங்கு குடியேறுகிறார். உள்ளூர் பெரியவர்கள் அங்குள்ள மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து எச்சரித்த போதிலும், சித்து அவற்றை நிராகரிக்கிறார். அவர் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், அவரைத் தொடர்ந்து மற்றொரு இளைஞரும் அடுத்தடுத்து மயமாகக் காணாமல் போகிறார்கள்.
இந்த வழக்குகளின் பின்னணியைத் தேடிச் செல்லும் காவல் துறைக்கு, எந்தவொரு தடயமும் சிக்காத வண்ணம் தொடர்ச்சியான கொலைச் சம்பவங்கள் அரங்கேறி பெரும் சவாலாக மாறுகின்றன. அத்துடன் சித்துவின் வீட்டில் அவரது மனைவியும், இன்னொரு நபரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். வழக்கு விசாரணை தொய்வு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்படும் சித்துவின் இடத்தை மற்றொரு அதிகாரி நிரப்ப, அதன் பின்னரே இந்த ஆயிரம் ஆண்டுகால மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகின்றன.
நடக்கப் போகும் விபரீதங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ என்ற ஒரு விசித்திரமான மார்டன் புத்தகத்தை மையப்புள்ளியாகக் கொண்டு, தொடக்கத்தில் ஒரு அமானுஷ்யப் படமாகத் தொடங்கி, பின்பாதியில் விறுவிறுப்பான சைக்கோ க்ரைம் த்ரில்லராகப் பயணிக்கிறது, இத்திரைப்படம்.

மாயமான மனிதர்கள் மற்றும் தொடர் கொலைகளை ஒரு நேர்த்தியான நான்-லீனியர் திரைக்கதை உத்தியில், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாலாஜி. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாகக் கால்பதித்துள்ள சித்து, தனது உடல்மொழியின் மூலமாகவே ஒரு கண்டிப்பான காவல் அதிகாரியின் பாத்திரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
சித்துவின் மனைவியாக வரும் தர்ஷிகா, கிராமத்துப் பெண்ணாக வரும் ரித்விகா மற்றும் காவலராக வரும் பிரதீப் ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், அருள் டி. சங்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை உணர்ந்து மிக எதார்த்தமாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே., அந்த மலைக்கிராமத்தின் அழகையும், அடர்ந்த காடுகளின் திகிலூட்டும் இருளையும் தனது கேமராவிற்குள் கடத்திப் பார்வையாளர்களுக்கு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவிற்கு இணையாக இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் காட்சிகளின் தீவிரத்தை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மூன்று வெவ்வேறு கிளைக்கதைகளைத் தொய்வில்லாமல் கச்சிதமாகத் தொகுத்து, படத்தின் வேகத்தைக் காப்பாற்றியுள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம்.
திரைக்கதையின் நான்-லீனியர் உத்தியில் ஆங்காங்கே சில சிறிய குழப்பங்கள் இருந்தாலும், இயக்குநர் பாலாஜி வழக்கமான ஒரு துப்பறியும் கதையை முற்றிலும் ஒரு புதுமையான கோணத்தில் கையாண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கொலையாளி யார், எதற்காக இந்தக் கொலைகள் நடக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பார்வையாளர்களின் அத்தனை யூகங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், இறுதிக்காட்சி வரை சஸ்பென்ஸ் குறையாமல் திருப்பங்களை அமைத்திருப்பது படத்தின் பலமாக இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘டார்க் ஹெவன்’ திகிலும், விறுவிறுப்பும் நிறைந்த க்ரைம் த்ரில்லர்!












