இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுசுடன் மம்முட்டி, நஸ்ருதின்ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷின் வெண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியான நிலையில், இரு படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் தனுஷ்,தனது ‘ஓம்’ திரைப்பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் நமது படம் வெளியாக இருக்கும் ஒரு நாளுக்கு முன்பாக, அக்டோபர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் மீதான மரியாதையின் காரணமாக எங்களின் ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.
அதேபோல் இந்த தீபாவளிக்கு சூர்யாவின் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால், ‘ஓம்’ படம் தீபாவளிக்கும் வெளியாகாது. ஞாயமாக சொல்வதென்றால், அவர்கள் தான் தங்களின் படங்களுக்கான வெளியீட்டு தேதிகளை முதலில் அறிவித்தார்கள்.சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் புரிதலுடன் ஒவ்வொருவரின் முடிவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் ‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்












