கண்ணியத்தை கடைபிடிங்க! ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை!!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.இப்படம் அஜித்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அப்டேட்களை தல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் படக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ‘அப்டேட்’ கேட்டனர். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை பட ‘அப்டேட்’ கேட்டது. எல்லாத்தையும் தாண்டி நேற்று பிரதமர் மோடியின் கார் வரும் போது வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

இவ்விவகாரம் ரசிகர்மன்றங்களை எப்போதோ கலைத்து விட்ட அஜித்தை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.இதை அறிந்த வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர், ‘ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக இன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் எனவும், ரசிகர்களின் ஆர்வத்தை நாங்கள் மதிக்கிறோம்’ என்றும் அதிகாரப்பூர்வமாக ஒரு ட்வீட்டை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தனது ரசிகர்களை கண்ணியம் காக்க சொல்லி தல அஜித்தே பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அஜித் கூறியுள்ளதாவது,”என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு வருகின்றனர்.
அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில், நான் எடுக்கும் முடிவுகள், என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.இதை மனதில் வைத்துக் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். நன்றி,இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.