ஒரு சமூக போராளியின் கதையே, ‘S/o காலிங்கராயர்’!.
சன் ஷைன் ஸ்டுடியோஸ் படநிறுவனம் தயாரித்து வரும் புதிய படம், S/o காலிங்கராயர். இப்படத்தை ரயிலுக்கு நேரமாச்சு, ஒரு தொட்டில் சபதம், சின்னக்காளை போன்ற படங்களை இயக்கிய பாரதிமோகன் இயக்கிவருகிறார்.
இதில், உதய் கிருஷ்ணா கதாநாயகனாகவும் குஷி, ராகினி, தென்றல் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். மேலும் மருத செழியன், ராதாரவி, போண்டாமணி, மியான்மர் (பர்மா) நாட்டைச் சேர்ந்த ஜின்னா, ஆடிட்டர் ஆர். பாஸ்கர், விஜய் பீட்டர், சதீஷ், ‘பிக்பி’ ராஜ், ஷார்மிளா, சிந்து ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதில், படத்தின் இயக்குனர் பாரதிமோகன் காவல்துறை உயர் அதிகாரியாகவும், இணைத் தயாரிப்பாளர் ஆடிட்டர் ஆர்.பாஸ்கர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி வரும் பாரதிமோகன் கூறுகையில்,”மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழும் மலைகிராம ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக வெளிநாடு மற்றும் உள்ளூர் சமூக விரோத சக்திகளை எதிர்த்து மக்களை காப்பாற்றும் ஒரு சமூக போராளியின் கதையே இப்படம்.
இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர், மருதமலை, தொண்டாமுத்தூர், அட்டப்பாடி, சோலையூர், மேற்கு தொடர்ச்சி மலை கேரள வனப்பகுதிகள் போன்ற இடங்களில், யானை,காட்டெருமை போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தலின் மத்தியில் இடைவிடாது நடந்து வருகிறது. 3 மாதம் ஆதிவாசி மக்களிடம் தங்கியிருந்து அவர்களுடைய வாழ்க்கை முறையை தெரிந்துகொண்ட பிறகே இப்படப்பிடிப்பை தொடங்கினோம்.” என்கிறார்
இப்படத்தின் ஒளிப்பதிவை சந்திரன் சாமி கவனிக்க,கவாஸ்கர்- பாரதிமோகன் இசையமைத்து வருகின்றனர்.