பெரியார் படம், அம்பேத்கார் படம் இருந்தால், படம் ஜெயிக்கிறது! சத்யராஜ் பரபரப்பு பேச்சு!!
Al -TARI Movies சார்பில் தயாரிப்பாளர் CR. செல்வம் தயாரிப்பில், இயக்குநர் தீரன் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “தீர்ப்புகள் விற்கப்படும்”. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவையும், குற்றங்கள் குறித்த சமூகத்தின் மீதான சாட்டையடியாகவும், பெண்கள் பாதுகாப்பை குறித்த விவாதத்தை உருவாக்கும் ஒரு தரமான படைப்பாகவும் உருவாகியுள்ளது இப்படம். 11:11 Productions சார்பில் தயாரிப்பாளர் Dr.பிரபு திலக் இப்படத்தை வழங்குகிறார். டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட நீதிபதி சந்துரு பேசியதாவது….
இந்தப்படத்தின் முன்னோட்டத்தை காண அழைத்த பிரபுதிலக் மற்றும் அவரது அம்மாவுக்கு நன்றி. இந்த தலைப்பு உங்களுக்கு அதிர்ச்சி தரலாம் ஆனால் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தராது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சன் கோகுலே கடந்த வாரம் நீதிபதிக்கு நீதி என ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அது குறித்தான பேட்டியில், நீதித்துறையில் ஊழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார். இது தான் நாட்டின் நிலைமை நடைமுறை. பலபேர் நாட்டில் முழு தண்டனை அனுபவித்து விட்ட பிறகு நிராபராதி என தீர்ப்பாகும். நீதி விற்கப்படுவது மட்டுமல்ல மறுக்கப்படவும் செய்யும். அதை புரிந்து கொண்டு, இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்துவோம் நன்றி.
சத்யராஜ் பேசியதாவது,”இன்று எனக்கு பெருமையான நாள். நிஜ ஹீரோவுக்கு முன்னால் நிழல் ஹீரோவாக நான் இருக்கிறேன். நீதிபதி சந்துரு அவர்களே டைட்டில் ஓகே என்று சொல்லிவிட்டார். படத்தில் இனி பிரச்சனை வந்தால் பார்த்து கொள்ளலாம். ஆஞ்சி சார் தான் இந்தக்கதைக்காக என்னை அணுகினார். கதையை இயக்குநர் தீரன் சொன்ன போதே கதை மிகவும் பிடித்துவிட்டது. கதை சென்சாரில் மாட்டிக்கொள்ளுமோ என சந்தேகம் இருந்தது. ஏனெனில் பாரதிராஜா சார் இயக்கத்தில் நான் நடித்த வேதம் புதிது படத்தை சென்சாரில் தடை என்று சொல்லி விட்டார்கள். அப்போது எம் ஜி ஆர் சார் சி எம், அவர் கேள்விப்பட்டு, பாரதிராஜாவிடம் படத்தை போடு என்றார். அன்று எம் ஜி ஆர் அருகே கைகட்டிக்கொண்டு, படம் பார்த்தேன். படம் ஆரம்பிச்சு இடைவேளையில் டீ காபி எல்லாம் தோட்டத்தில் இருந்து வந்துவிட்டது. படம் முடிந்த பின்னாடி, ரிலீஸ் டேட் பிக்ஸ் பண்ணுங்க படம் ரிலீஸ் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். அப்படி தான் படம் வந்தது. அப்புறம் பெரியார் படம், அந்த படத்தில் பெரியார் பேசியது தான் வசனமாக வைத்தோம். ஆனால் பெரிய எதிர்ப்பு வந்தது. கலைஞரிடம் கேட்ட போது, பெரியாரே எதிர்ப்பில் வந்தவர் தானே அப்புறம் படத்திற்கு மட்டும் வராதா என்றார். ஆனால் அப்புறம் தான் தெரிந்தது நீதிபதி சந்துரு தான் பெரியார் படம் வரக்காரணமாக இருந்துள்ளார். அதனால் இந்தப்படத்தில் சென்சார் பயம் இருந்தது. இப்போது சென்சார் வாங்கி விட்டோம் என்றார்கள் ஆனால் இந்த காலத்தில் படம் வந்த பிறகு சென்சார் செய்கிறார்கள், ஜெய்பீம் வந்த பிறகு பலர் சென்சார் செய்கிறார்கள். இன்று பெரியார் படம், அம்பேத்கார் படம் இருந்தால், படம் ஜெயிக்கிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அது போல் இந்தப்படம் இதன் நல்ல கருத்துக்காக ஜெயிக்கும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை இந்தப்படம் பிடித்தால் ஆதரவு தாருங்கள் நன்றி.