“வீணானதே தாய் தந்த பாலும்!” -முத்து சிற்பியின் உருக்கமான பாட்டு.!

‘ரேணிகுண்டா’ படம் மூலம்,’நானும் நல்ல இயக்குநர்தான் ‘என அறிமுகம் ஆனவர்  ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில்,
மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’.

காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

வலிகளை அழுத்திப் பேசும் என சொன்னவர்களில் சிலர் பார்வையாளர்களுக்குத்தான் வலிகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.சொல்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இந்தப்படம் படம் எப்படி? 

சொல்லுமா,தருமா?

பார்க்கலாம் படம் வந்த பின்னர்!!

இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் – மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல்.

“காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் நம்பிக்கையைத்தருகிறது.

 பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோர்களாக இளங்கோ, கவுசல்யா மற்றும், ஹீரோயின் வித்யா பிள்ளை பெற்றோர்களாக புதுமுகம் தெய்வேந்திரன், நிமிஷா போன்றோர்கள் நடித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையில், விஜய் சூப்பர் சிங்கர் புகழ் முத்து சிற்பி கிராமத்து மணம் வீசும் குரலில் இப்பாடலை பாடியுள்ளார். வெளியான நொடியில் இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றுள்ளது.

“வீணானதே தாய் தந்த பாலும்.. ” போன்ற வரிகளால் அர்த்தமுள்ளப் பாட்டாக படைத்திருந்தார் கவிஞர் யுகபாரதி.