மணிரத்னம், ரஜினி யாரும் ‘ஜீவி’க்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை.! கே.டி குஞ்சுமோன் பரபரப்பு பேச்சு !!
தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
இவ்விழாவில் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசியதாவது…
திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன், ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும், மணிரத்னம் உடைய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் என சொன்னேன், அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன். நாயகன் படம் எனக்கு லாபம் இல்லை, இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை, மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலை தான் இங்கு இருக்கிறது, தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை, தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும் இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் ராதாரவி பேசியதாவது…
இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர் உனக்கு உதாரணமாக பலரை சொல்லுவார்கள் அதை கேட்க கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப்படம்
கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப்படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். நான் ஆறுபடம் எடுத்தேன், கடனாகி தான் விட்டேன். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்ன படங்கள் எடுக்க போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் அமைச்சர் முன்னால் ஒப்பந்தம் உருவாக போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப்படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.