கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு வித்திட்ட பிரபலங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கும் முக்கிய பங்கு உண்டு.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று வரை முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும்  கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் புதிய நவீன  தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்   படங்களை கொடுத்துள்ளார் .சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது.
கமலின் நடிப்பு திறமையை பாராட்டி 19 பிலிம்பேர் விருதுகள்,10 தமிழக அரசு விருது, தேசிய விருது, மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது பத்மபூஷண் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளை  கமல்ஹாசன் பெற்றுள்ளார்.

நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், கதாசிரியர், அரசியல்வாதி என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கிறார் கமல். இவர் நடிகராக மட்டுமல்லாது ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற மே 27ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவில் சிறப்பாக பங்காற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,  என பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படத்தை தொடர்ந்து  தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.