அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்: 2 மணி நேரம் முக்கிய ஆலோசனை!

‘லியோ’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கஉள்ள புதிய படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் முழுமூச்சாக ஈடுபடவுள்ளார் என்றும் பரவலான பேச்சு எழுந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வமாக நடிகர் விஜய் எதுவும் இதுவரை அறிவிக்காத நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளது.பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

சமீபத்தில், 234 தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்து அவர்களை ஊக்கப்படுத்தி கலந்துரையாடினர். சுமார் 13 மணி நேரம் ஒரே இடத்தில் நின்றவாறு கொஞ்சம் கூட சலிப்பின்றி தன்னை பார்க்க வந்த மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.அதோடு மட்டுமின்றி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அறுசுவை உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து ஏற்பாடு என சகலத்தையும் கவனித்துக் கொண்டார்

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்துள்ள நடிகர் விஜய், இன்று மதியம் அவர்களுடன் சுமார் 21/2 மணி நேரம் கலந்துரையாடினார்..

இக்கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம், மக்கள் இயக்க செயல் பாடுகள், பொதுமக்களுடனான விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெருக்கம், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடனான அனுகுமுறை, உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து நிர்வாகிகள், மாவட்டத்தலைவர்களுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.