விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்!
விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை வலிமைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.கடந்த வருடம் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகளோடு அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துரையாடி அதன் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்
இந்நிலையில் வரும் 26 ம் தேதி விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத் தலைவரும், தலா 3 தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
இது குறித்து புஸ்ஸி ஆனந்த் மாவட்ட தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் முகநூல்,ட்விட்டர், யூடியூப் ,இன்ஸ்டாகிராம்,வாட்ஸ்அப் வாயிலாக மாவட்டம், இளைஞரணி தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி, மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்தான (ஐடி விங்) ஆலோசனைக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (26.08.2023) அன்று காலை 8.55 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள ‘அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க’ அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த மூன்று (ஐடி விங் ) நபர்களை தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .