இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றிய கதை,’கடாட்சம்’!!

 

சிவசக்தி முனீஸ்வரர் பிலிம்ஸ் சார்பில் சியாமளா ரமேஷ் தயாரிப்பில், பட்டுக்கோட்டை சிவா இயக்கியுள்ள புதிய படம், ‘கடாட்சம்’.. இப்படத்தின் கதாநாயகனாக கார்த்திக் சரண் நடிக்க, கதையின் நாயகியாக கருமேகங்கள் கலைகின்றன,வா வரலா வா போன்ற படங்களில் நடித்துள்ள மகானா நடித்துள்ளார்

இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் பாக்யராஜ் நடிக்க நிழல்கள் ரவி,கஞ்சா கருப்பு,பெஞ்சமின், ராட்சசன் யாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை கே.எஸ்.பழனி கவனிக்க, வாரன் சார்லி இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள பட்டுக்கோட்டை சிவா கூறுகையில்,”கலைக் கல்லூரி மாணவர்கள் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லும்போது காட்டுப் பகுதியில் அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதையின் கரு.முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் நகைச்சுவை அம்சமும் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.இதன் படப்பிடிப்பு திருச்சி துறையூர், திண்டுக்கால் சிறுமலை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் 45 நாட்களில் மூன்று கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

மேலும் இயற்கை வளங்களை ஒவ்வொருவரும் நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்காகவும் பாதுகாக்க வேண்டும் என்ற மையக்கருத்தை இந்த படத்தில் வைத்ததோடு இயற்கையை பாதுகாப்போம் என்ற பெயரில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை இயற்கை பாதுகாக்க விழிப்புணர்வு சுடர் ஓட்டம் நடத்த திட்டமிட்டுளோம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.