இறுகப்பற்று – விமர்சனம்!
‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ மற்றும் ‘பொடன்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களின் சார்பில், எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம், இறுகப்பற்று. இதில், விக்ரம் பிரபு, விதார்த், ஶ்ரீ, ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபர்ணதி, சானியா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
ஐடி துறையில் பணியாற்றுபவர் விதார்த். இவரது மனைவி, அபர்ணதி. குழந்தை பிறப்பிற்கு பிறகு, அபர்ணநதி உடல் பருமனாகி விட்ட காரணத்தால், விதார்த், அபர்ணதியை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்.
உருகி.. உருகி.. காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஶ்ரீ, சானியா அய்யப்பன். திருமணதிற்கு பிறகு இவர்களது வாழ்க்கையில் சந்தோஷம் காணாமல் போகிறது. இதன் காரணமாக இருவரும் பிரிய முடிவெடுக்கின்றனர்.
இவர்களுக்கு ஆலோசணை வழங்கும் உளவியல் நிபுணர், ஷ்ரத்தா ஶ்ரீ நாத். இவர், தனது கணவர் விக்ரம் பிரபுவுடன், எந்த பிணக்கும் வந்து விடக்கூடாது, என நினைத்து தன்னுடைய உளவியல் உத்திகள் மூலம் செயல் படுத்துகிறார். இதை உணரும் விக்ரம் பிரபுவால் இவர்களுக்கிடையேயும் பிரச்சனை உருவாகிறது. இந்த பிரச்சனைகளுக்கு எந்த மாதிரியான தீர்வு கிடைத்தது? என்பது தான், இறுகப்பற்று.
‘இறுகப்பற்று’ அர்த்தம் பொதிந்த, அழகான தமிழ்ப் பெயருடன் கதைக்கு ஏற்ற தலைப்பாக இருப்பதே இப்படத்தின் முதல் சிறப்பு! கணவன் மனைவிக்குள் எழும் பிரச்சனைகளை நிதானமாக அனுகினாலே பாதி தீர்வு கிடைத்து விடும். என்ற அழகான கருத்தாக்கத்தோடு, கதையமைத்திருக்கிறார், இயக்குனர் யுவராஜ் தயாளன். அதோடு, கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை.. கணவன் மனைவியாக இருந்தாலே போதும் என்ற வசனத்தின் ஊடாக, பல எதார்த்தமான பிரச்சனைகளை, அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஶ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஶ்ரீ – சானியா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அதில் அபர்ணதியும், ஷ்ரத்தா ஶ்ரீநாத்தும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுவர். கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
உளவியல் நிபுணராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது பிரச்சனைகளுகான தீர்வை தேடுவது, வெகு இயல்பாக, அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதாக சிறப்பாக இருந்தது.
அபர்ணதி ஜிம்முக்கு செல்லும் காட்சிகளெல்லாம் வெகு சிறப்பு, சிரிப்பு!
தனது பிரச்சனையை உணரும் ஶ்ரீ, கோர்ட்டில் கலங்கிய படி நிற்பது. ஷரத்தா ஶ்ரீநாத் மொபைல் ஆப் மூலம், தனது அன்பினை வெளிப்படுத்துவது தெரிந்து விக்ரம் பிரபு, செய்வதறியாது அதிர்ச்சியுடன் நிற்பது. அபர்ணதி ஓட முடியாமல் மூச்சு வாங்கி நிற்பதை பரிதாபத்துடன் பார்க்கும் விதார்த். இது மாதிரியான எமோஷனலான காட்சிகள் படம் முழுவதும் இருக்கிறது.
இது தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனையை புரிந்து கொள்ளவும், அரவனைத்து கொள்ளவும் செய்யும். பரபரப்பான சூழலில் இயங்க்கிகொண்டிருக்கும் இன்றைய தம்பதிகள் கண்டிப்பாக இந்த படத்தினை பார்த்தால், இன்னும் அழகாக மாறும் அவர்களது வாழ்க்கை!
மொத்தத்தில், புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தம்பதியரிடையே, இணக்கத்தை உருவாக்கும் என்கிறார், இறுகப்பற்று படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளான்.