“தயாரிப்பாளராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு! -ஜீ. வி.பிரகாஷ்

ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதியபடத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டுள்ளது.,  சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில்,கடல் பின்னணியில் ஹாரர் அட்வென்ச்சர் ஜானரில்  உருவாகும் இப்படத்தில் ஜீ. வி பிரகாஷ் குமாருடன் ர்  திவ்யபாரதி, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ‘கல்லூரி’ வினோத், சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் சபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து கமல் பிரகாஷ் பேசுகையில், ” என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு ‘கிங்ஸ்டன்’ போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்து கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ்  மற்றும் தயாரிப்பு தரப்புக்கு நன்றி இவ்வாறு அவர் கூறினார்.

தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தினை என்னோடு கைகோர்த்து தயாரிக்கவுள்ள ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.