‘தர லோக்கல்’ படமா ‘லியோ’? -விமர்சனம் .

‘கைதி’,’விக்ரம்’ படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கியுள்ள படம் தான் லியோ. இதன் காரணமாக படத்தின் ஆரம்பத்திலேயே விஜய்யை ‘கைதி’ நெப்போலியன் சந்திப்பதும், படத்தின் கிளை மாக்ஸ் காட்சியில், போதைப் பொருளை பிடித்த போலீஸ் என அறிமுகம் ஆவதும்,இது பக்கா லோகேசின் எல்சியூ படமாகவே அமைந்துள்ளதுஇதில் கதைன்னு பார்த்தா, நாயகன் பார்த்திபன் விஜய் விலங்குகள் நல ஆர்வலராகவும், இன்னொரு பக்கம் காபி ஷாப், மனைவி, குழந்தைகள் என மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திடீரென ஒரு கும்பலால் ஆபத்தில் சிக்கும் தன் குழந்தையை காப்பாற்ற,அந்த கும்பலையே குருவி சுடுற மாதிரி போட்டுத்தள்ளுகிறார்.அப்புறம் என்ன, கொல்லப்பட்டவர்களின் கூட்டாளிகள் விஜய்யையும் அவரது குடும்பத்தையும் வேட்டையாட துடிக்க,அவர்களுடன் நாயகன் பெரும் போராட்டமே நடத்தி வருகிறார்.

இதற்கிடையே பார்த்திபன் விஜயின் வாழ்க்கைக்குள் எண்ட்ரியாகும் (சஞ்சய்தத்) ஆண்டனி தாஸ், அங்கு இருப்பது பார்த்திபன் அல்ல, அது லியோ என புது குண்டை தூக்கிப்போட, அட இது என்னாங்கடா,அப்ப பார்த்தி எங்கடா? உண்மையில் அங்கு இருப்பது பார்த்தியா, லியோவா இது தாங்க படத்தோட மீதிக்கதை.

இப் படத்தில் முற்றிலும் புதிய விஜய் யை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் லோகேஷ்.குழந்தையிடம் பாசம் காட்டும் அப்பா , பொறுப்புள்ள கணவன், குடும்பத்துக்காக பொங்கி எழும் பார்த்தி, அதிரடி காட்டும் லியோ என விஜய் நடிப்பில் வெறித்தனம் காட்டியுள்ளார். விஜய், திரிஷா காதலை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்து இருக்கலாம். ஆக்சன் கிங் அர்ஜுன் இப்படத்தில் இறங்கி அடித்துள்ளார் என்றே சொல்லலாம்.ஆண்டனியாக வரும் சஞ்சய் தத் வழக்கமான வில்லனாக மிரட்டுகிறார். கவுதம் மேனன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.விஜய், ஹைனாவுடன் சண்டையிடும் சி.ஜி காட்சி சிறப்பாக உள்ளது.

முதல் பாதியில் நேர்த்தியான திரைக்கதையை வடிவமைத்த இயக்குனர் இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டுள்ளார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்,இரண்டாம் பாதி கதையில் வலுவில்லாததால் சற்றே தொய்வு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அதை சற்று மறக்க செய்வது விஜயும் அவரது ஆக்சன் காட்சிகளும் தான். இப்படத்தின் இரண்டாம் பாதியை அனிருத் தனது பின்னணி இசையால் முடிந்த அளவு முட்டு கொடுத்து தாங்கி இருக்கிறார். விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும், மற்றவர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே லியோ கொடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை இது ஒரு எல் சியூ படம் என்பதால் கிளைமாக்சில் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருக்கிறது.