பேண்டஸி திரில்லர் படமாக உருவான  ‘மோகினிப் பட்டி’  

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் தன் உதவியாளர்  ஜெயவீரன் காமராஜ் இயக்கி வரும்  ‘மோகினிப் பட்டி’  படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றுள்ளார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

இப் படம் பற்றி இயக்குநர் ஜெய வீரன் காமராஜ் கூறுகையில்,”மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தைச் சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று  சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படத்தில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சினிமா தாகத்தோடு உள்ள பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் .அப்படி சங்கீத்  , நிரஞ்சன் சிவசங்கர், தெளபிக்கா, ஜெயஸ்ரீ என்று  நடிக்க வைத்தோம். ஒளிப்பதிவு எம்.கே.கமலநாதன், இசை மனோஜ் குமார் பாபு. ப்ளூ மூன் ஸ்டுடியோ சார்பில் ஜெயபாரதி காமராஜ் தயாரித்துள்ளார்.

இது பேண்டஸி திரில்லர் படமாக  உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை  ஒரு தயக்கத்தோடு தான் எஸ்.ஏ.சியிடம்  சொன்னேன் .அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி நடித்து கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்கிறார்.