விஜயகாந்த் நல்லாருக்கார்! நடிகர் நாசர் பேட்டி!!
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை மியாட் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி யூனியர் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி.உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர்.
பின்னர் அவரது உடல்நிலை குறித்து விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.பின்னர் விஜயகாந்த உடல் நிலை குறித்து அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் நடிகர் நாசர் கூறுகையில்,”விஜயகாந்த் நல்லாருக்கார். அவரது எல்லா உடல் உறுப்புகளும் நன்றாக செயல்படுகிறது.அவரது உடல்நிலை குறித்த செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை சந்தித்தோம். அவரும் விஜயகாந்த் நன்றாக இருப்பதாக கூறினார்.
தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார். விஜயகாந்துக்கு சுவாச பிரச்சினைகள் இருப்பதால் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களில் அவருடைய சுவாச பிரச்சினைகள் சரியாகி குணமடைய வேண்டும் என மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு நாசர் கூறினார்.