மகாராஜா . ( விமர்சனம் ) மகுடம் சூட்டலாமா ?
![]()
பி. எல் . தேனப்பன் பார்பர் ஷாப் ஓனர். நடிகர் ராம்கி யின் ரசிகர் என்பதால் அவரது படத்துடன் போர்டு வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த கடையில் பாரதிராஜாவுடன் விஜயசேதுபதியும் வேலை பார்க்கிறார்கள். விஜயசேதுபதியின் பெயர்தான் மகாராஜா. ராம்கி ஓகோ என்று வாழ்ந்த காலத்துக் கதை என்று யூகிக்க முடிகிறது. நடப்பு காலத்தில் யார் ராம்கியின் பெயரை வைக்கப்போகிறார்கள். சேதுவுக்கு மகளுடன் பாசமும் நேசமுமாக வாழ்கிற சின்ன குடும்பம்தான்.இந்த மகள்தான் மகாராஜாவின் ஆணிவேர் .!!!
சரி கதைக்குள் போவோம்.
சேதுபதியின் வீட்டில் கொள்ளை . லட்சுமியை தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். சேதுவுக்கும் நல்ல அடி . ஒரு காது சேதம் . காவல் நிலையத்தில் சம்பவத்தை வரிசைப்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் அருள் தாசிடம் சொல்கிறார். சேதுவின் நடிப்பு இங்கே இருந்து ஆரம்பிக்கிறது. கொள்ளை போன லட்சுமியை இவர் விவரித்து சொன்னபிறகு காண்டாகிப்போன எஸ். ஐ . விட்ட பளார் ,அதன்பின்னர் அங்கு நடக்கும் கலாட்டா ,சேதுவின் ‘உடும்புப் பிடி’ மகிமை இவையெல்லாம் டார்க் காமடி கதையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.’டஸ்ட் பின்’னுக்குத்தான் லட்சுமி என்கிற பெயர். அதற்கான காரணமும் ,அதை கடவுளாக எண்ணி வணங்குவதும் சேதுவைப் பொருத்தவரை டபிள் ஓகே !
அந்த குப்பைத்தொட்டியை கண்டுபிடிப்பதில் சேது ஏன் அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும் என்பதற்கு இடைவேளைக்குப் பின்னர் விடை சொல்லத்தொடங்குகிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். ‘நான் – லீனியர் ‘ ஸ்டைலில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நடப்பு காலமும் ,கடந்த காலமும் கலந்து சொல்லப்படுவதால் சில இடங்களில் மண்டையில் மத்தளம் கொட்டுகிறது. முதல் பாதியில் சொல்லிய பல நெருடல்களுக்கு பிற்பாதியில் விடைகளை சொல்லி வித்தை காட்டி விட்டார் இயக்குநர். எடிட்டர் பிலோமின் ராஜ் இன்னொரு இயக்குநராகி கதைக்கு சிறப்பு கூட்டி இருக்கிறார் என்றாலும் தப்பில்லை.
விஜய சேதுபதியின் 50 -வது படம் கதையின் நாயகி இல்லாமல் ,காதல் பாட்டுகள் ,அயிட்டம் டான்ஸ்கள் இல்லாமல் விறு விறுப்புக் குறையாமல் செல்வதற்கு முக்கிய காரணமே காமக் கொடூரன்களை தேடி நடக்கும் வேட்டைதான். . இதை வெளிப்படையாக சொல்லாமல் திரைக்கதை செல்வது மிகச் சிறப்பு. மகளை சிதைத்தவர்களை கண்டு பிடிப்பதற்கு ஒரு தகப்பன் எந்த அளவுக்கு போவான் என்பதை அற்புதமாக காட்டிவிட்டார் சேதுபதி. வாழ்த்துகள் .!!! கெட்ட போலீசாக கருதப்பட்டவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை கடைசி காட்சியில் சொன்ன பாங்கு துணிச்சல் !”எனக்கு நடந்த மோசமான விஷயத்தை நினைச்சு கவலைப்பட மாட்டேன். என்று கடந்து போய்கிட்டே இருப்பேன். ” என்று பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி ஸஜலா நேமிதாஸ் வில்லன் அனுராக் காசியப்பிடம் சொல்வது பாராட்டுக்குரியது . அனுராக் காஷியப்பை கோலிவுட் நடிகராகத்தான் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு மண்வாசம். சிறந்த நடிப்பு. வாழ்ந்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி யாருடைய மகள் என்பது தெரிகிறபோது நித்திலனுக்கும் ஒரு கிரீடத்தை சூட்டுங்கள் மனசு சொல்கிறது. சிங்கம் புலிக்கு இப்படி ஒரு கேரக்டரா ,? மனுசன் பின்னிட்டான் . இன்ஸ்பெக்டர் நட்டி,அருள்தாஸ் ,பாய்ஸ் மணிகண்டன் இவர்களை வாழ்த்தாவிட்டால் இந்த விமர்சனம் நிறைவு அடையாது.
குறைகள் இருந்தாலும் அதை நிறைவென கருதச் சொல்கிறது மனசு. இதே நேரத்தில் இன்னும் எத்தனை படங்களில் அப்பாவி சிறுமிகளை வேட்டையாடுவார்களோ என்கிற கவலையும் எழாமல் இல்லை. ஆனால் நாட்டு நடப்புதானே படமாகிறது !!!
இந்த மகாராஜா மாண்புகள் நிறைந்து சிறந்திருக்கிறான். நல்ல ஆக்சன் திரில்லர்.
–தேவிமணி