தங்கலான் ( விமர்சனம்) சீயான் விக்ரம்,ஜி. வி. பிரகாஷ் இல்லையேல் ..?

பா. ரஞ்சித் என்றாலே ‘விமர்சனத்துக்குரியவர் ‘ என்கிற முத்திரை இப்போது அழுத்தமாகவே குத்தப்படுகிறது. அவரது அரசியலும் ,திரைப் படைப்புகளும் சாதிய கலவையுடன் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

சரி ,அவரது அண்மைப் படைப்பான ‘தங்கலானைப்  ‘ பார்க்கலாம்.

ஆங்கிலேயனின் காலனி ஆதிக்கக் காலத்துக் கதை. வட ஆற்காடு மாவட்டத்தின் வரண்ட பகுதியின் வாழ்வியல் தொடர்புடையது. பசுமை தொலைந்து போனாலும் இயற்கை தனது அடி மடியில் தங்கத்தை பதுக்கி வைத்துக் கொண்டிருப்பதாக புத்தகம் சொல்லியிருந்ததை அடுத்து பரங்கியன் ஒருவன் அதிகாரத்தின் துணை கொண்டு பூர்வ குடி மக்களை தன்னுடைய கட்டளைக்குக் கீழாக கொண்டு போகிறான். தங்கம் எடுத்தானா ,இல்லையா என்பதுதான் கதையின் விரிவாக்கம்.

தங்கலான்  என்கிற தலைவனே கதையின் ஒன்றே ஆலயம். அவனே தேவனும்.! மிகைப் படுத்தவில்லை ,தன்னுடய அசல் முகத்தைத் தொலைத்துக் கொண்டு 19 -ம் நூற்றாண்டின் அடிமை முகத்தை மாட்டிக் கொண்டிருக்கிறார் சீயான் விக்ரம்.. உலக நாயகனை அடுத்துக் கோவணம் கட்டி வந்திருக்கிற அசல் நடிகர்.  கேரக்டருக்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிற செல்லுலாயிட் நாயகன். தமிழ்ச் சினிமாவின் இன்றைய சூப்பர்ஸ் எவரும் தொடுவதற்குக் கூட பயப்படுவார்கள். தீண்டாமை ? லாஸ் ஏஞ்சல்ஸ் புத்திரர்கள்  சவாலாக செய்கிற கேரக்டரை விக்ரம் சவாலுடன் ஏற்றிருக்கிறார்.” சாவுக்கு துணிஞ்சவனுக்குத்தான் இங்க வாழ்க்கை” என்று அவர் பேசுகிற  வசனம் பல உள்ளர்த்தம் அடங்கியது. இவரது நடிப்புக்கு இங்குள்ள  விருதுகள் போதுமானவை இல்லை என்பது விமர்சனப் பார்வை.

தங்கத்தின் நகலாக இருக்கிற சீயானுக்கு இணை பூ பார்வதி. மனைவியாக வாழ்ந்திருக்கிறார் . ரவிக்கை என்பதை அறியாத மாக்களாக வாழ்ந்த ஒதுக்கப்பட்ட -ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அது தூக்கிப் பிடிக்கிற சாதனமாக தெரிந்ததில் வியப்பில்லை. ரவிக்கையை அணிந்து கொண்டு அவர் வெகுளியாக ” அப்படியே தூக்கிப்பிடிச்ச மாதிரி இருக்கு ” என்று சொன்னது  புதுமையின் அனுபவ வெளிப்பாடு.  முரட்டுக் கணவனின் சாமர்த்தியமான பேச்சில் சரண் அடைந்து சங்கமிப்பது இயல்பான பலவீனம்.  நம்மில் சிலர்க்கு ஏக்கம் வரலாம். !!!!! 

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் சைவமும் ,வைணமும் , பின்னர் பவுத்தமும்  கலந்தது என்று சொல்வார்கள். கதையில் அதையும் கலந்து சொன்னது இயக்குநர் பா. ரஞ்சித்தின் தணியாத ஆசையாக இருந்திருக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் கடமையும் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் பிரிந்துபோனார்கள் என்பதை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்பது  கருத்து. ஒரு இடத்தில் ஆசையே துன்பத் துக்கு காரணம் என புத்தம் ஒலிக்கிறது. அது யாருக்காக ? புத்தர் சிலை  தலை துண்டித்தல்  கதைக்காகவா ?சமணம் இங்கு சைலன்ட் ஆக்கப்பட்டிருக்கிறது !ஏன் ?

“ராமானுஜர் சொல்லிருக்காரு . வைகுண்டமே போயிரலாம்”என்று சொல்லி தனியாக ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிற பசுபதி சில இடங்களில் நகைச்சுவைக்கும் பொருந்துகிறார். சிறந்த நடிப்பு.  

தங்கத்தை காக்கும் சூனியக்காரியாக மாளவிகா மோகனன். அத்தனை பற்களும் தெரிய ,அகலமாக வாய் திறந்து ‘கத்துகிற’போது அந்த காட்டு  குயில் மயிலென தெரிகிறது. ஒதுக்கப்படவில்லை ,எனக்கும் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார்கள் என மகிழ ஒரு கேரக்டர்.

 இயல்பான ஒரு வெள்ளைக்காரர்  – டேனியல்!.

இசை .. ஏழிசை வேந்தன் இராவணன் ஜி. வி. பிரகாஷ். அற்புதம் படைத்திருக்கிறார். நல்ல வேளையாக இயக்குநர் வேறு எவரையும்  நாடவில்லை . தேடியிருந்தால் நமக்கு “மினிக்கி” பாடல் கிடைத்திருக்காது.சாமான்யர்கள் முதல் கோட்டு சூட்டு போட்டவர்கள் வரை இன்று பாடுகிறார்கள் மினிக்கியை.!

இந்த கதை ‘பாலர் மலர்’ படைப்பு.  என்றாலும் ஃ பாரின் படம் பார்க்கிற உணர்வு இருக்கிறது. திரைக்கதையில் இடரல். பல இடங்களில் வசனங்கள் கேட்கவில்லை. தேய்ந்து போயிருக்கிறது. தரமானவையாக இருக்க வேண்டிய விஎபக்ஸ் சித்து வேலைகள் தரமற்று போயிருக்கிறது.  இந்தப்படம் பாமரர்களுக்குப் புரியாது.  ஆனால்  திரைப்பட சரித்திரத்தில் இந்த படம் இடம் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

தங்கலான் . முதலும் முடிவும்  சீயான் விக்ரம் !!!யாருக்கோ சவால் விட்டிருக்கிறார் இந்த சாதனையாளர்.!

—தேவிமணி