பாலியல் வன்முறை 5 ஆண்டுகள் தடை. ஆபாச யூ டியூப் பதிவுகள் மீது அதிரடி .!

பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தெரியாமல் திகைத்து நின்றவர்கள் ஒரு முடிவெடுத்து வந்திருக்கிறார்கள். 

பாராட்டவேண்டியதுதான். ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகும் வரை காத்திருந்திருக்கிறார்களே என்பதுதான் வேதனை. அதுவும் அண்டை மாநிலத்தின்  ஹேமா கமிட்டி.!

எப்படியோ நல்ல காலம் பிறந்திருக்கிறது. முதுகெலும்பு வலுவாக இருக்கிறது என்பதை தீர்மானம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நல்லது நடக்க வேண்டும். 

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ,தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று (04.09.2024) காலை 11:30 மணியளவில்  நடந்திருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ , லலித குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு பல தீர்மானங்ககளை ஒருமித்த குரலில் நிறைவேற்றி இருக்கிறார்கள். 

மேலும் குழுவில்  ஒரு வழக்குரைஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது

தீர்மானங்கள்….

1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனித்  தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ – மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் தடை,அத்துடன்  மீடியாவிடம் பேசக்கூடாது என கடுமையான எச்சரிக்கை விட்டதுடன் , ஆபாச யூ  டியுபர்கள் மீது வழக்கு தொடுத்தால் உதவி என அதிரடியாக  தீர்மானங்களில் வெடி குண்டு வைத்திருக்கிறார்கள்.

பார்க்கலாம் . மகளே உன் சமத்து.!