கலகலப்பான குடும்ப கதை ‘ஃபேமிலி படம்’!

யுகே கிரியேஷன்ஸ் கே பாலாஜி தயாரித்துள்ள‌ ‘ஃபேமிலி படம்’ எனும் கலகலப்பான நகைச்சுவை ததும்பும் குடும்ப திரைப்படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கி உள்ளார்.

டைனோசார் புகழ் உதய் கார்த்திக் மற்றும் சுபிக்ஷா கயா முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில், விவேக் பிரசன்னா, ஸ்ரீஜா ரவி, பட்டிமன்ற பிரபலம் மோகனசுந்தரம், பார்த்திபன் குமார் (அறிமுகம்) மற்றும் கவின் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள‌னர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் செல்வகுமார் திருமாறன், “மூன்று சகோதரர்களை கொண்ட ஒரு குடும்பத்தை கதை சுற்றி சுழல்கிறது. இந்த மூவரில் இளைய சகோதரர் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார். ஒட்டுமொத்த குடும்பமே இதற்கு ஆதரவாக நிற்கிறது. அவரால் தனது கனவை நனவாக்க முடிந்ததா, இதனால் குடும்பத்தில் எந்த சிக்கலாவது நேர்ந்ததா என்பதை கதை விவரிக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தப்படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. ஆனால் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும் சந்தர்ப்பங்களுமே எதிர்மறையாக நிற்க, அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை ‘ஃபேமிலி படம்’ சுவாரசியமாக சொல்லும். சென்னையில் 80 சதவீத படப்பிடிப்பும், மதுரையில் 20 சதவீத படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது,” என்றார்.

‘கேடி கருப்புதுரை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மெய்யேந்திரன் ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். அனிவி பாடல்களுக்கு இசையமைக்க, ‘விலங்கு’ இணையத்தொடரில் தனது இசையின் மூலம் மிரட்டிய அஜிஷ் இப்படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார். ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பையும், நந்து கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

யுகே கிரியேஷன்ஸ் கே பாலாஜி தயாரிப்பில் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக், சுபிக்ஷா கயா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள‌ கலகலப்பான குடும்ப கதையான‌ ‘ஃபேமிலி படம்’ டிரைலர் இம்மாத இறுதியிலும், திரைப்படம் டிசம்பரிலும் வெளியாகிறது.