பரபரப்பான அரசியல் கிரைம் திரில்லர் ‘ஐபிஎல்’ !

சென்னையை சேர்ந்த முன்னணி தொழிலதிபரான ஜி ஆர் மதன் கிருஷ்ணன் ராதா ஃபிலில் இன்டர்நேஷனல் பேனரில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா ‍‍‍- இந்திய தண்டனை சட்டம்). இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மணிமாறன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கருணாகரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

பரபரப்பான அரசியல் பின்னணியில் கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில் (‘ஆடுகளம்’) கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி (‘விருமாண்டி’ மற்றும் ‘வேட்டையன்’ புகழ்), குஷிதா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட் மற்றும் திலீபன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். பைக் சாகச நிபுணரான டிடிஎஃப் வாசனும், குஷிதாவும் ‘ஐபிஎல்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கருணாகரன், “நாட்டில் நடைபெறும் திடுக்கிடும் சில குற்றங்களை நாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு சில தினங்களில் மறந்து விடுகிறோம். ஆனால் அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியில் வருவதற்காக என்ன செய்கிறார்கள், அவர்களால் வெளியில் வர முடிந்ததா என்பதே ‘ஐபிஎல்’ படத்தின் கரு,” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இரண்டு பாடல்கள் தவிர படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்து விட்டது. மிகவும் அருமையாக உருவாகியுள்ள ‘ஐபிஎல்’ பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இந்த தருணத்தில் எனக்கு இயக்குநர் வாய்ப்பளித்து, படத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்த தயாரிப்பாளர் ஜி ஆர் மதன் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,” என்றார்.

‘ஐபிஎல்’ திரைப்படத்திற்கு எஸ் பிச்சுமணி ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பை கையாள்கிறார். அஷ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு தினேஷ் சுப்பராயன் பொறுப்பேற்க, பவன் சிந்தூரி ஸ்டூடியோ வடிவமைப்பை கவனிக்க‌, நிகில் முருகன் மக்கள் தொடர்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ராதா ஃபிலில் இன்டர்நேஷனல் ஜி ஆர் மதன் கிருஷ்ணன் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி நடிப்பில் பரபரப்பான அரசியல் கிரைம் திரில்லர் ‘ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா) திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.