சம்பந்தி ஹீரோ, மாப்பிள்ளை டைரக்டர்…பட விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!

மிக மிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து , சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ராஜா கிளி’.நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் சமுத்திரக்கனி இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்களுடன் ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வெளியாகஉள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன் பேசுகையில்,”இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ. மாப்பிள்ளை டைரக்டர்.. நான் கூட இதுவரை நடிக்கிறாத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா சார் நடித்து இருப்பதாக சொன்னார்கள். நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள்.. எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லையே. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
கதையின் நாயகன் தம்பி ராமையா பேசும்போது, “எனது மகன் அறிமுகமாக இயக்குநராக அறிமுகமாகும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எம்ஜிஆர் ஆகவும் ஆர்எம் வீரப்பனாகவும் என எல்லாமாக வந்திருக்கும் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. நான் சந்தித்த பல தொழிலதிபர்களிடம் உரையாடிய போது மனிதரில் புனிதராக இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆத்மா அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்த ரகசியத்தை ஒரு பச்சை குழந்தை போல என்னிடம் கொட்டி தீர்த்தார். அதை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டுமே என நினைத்தபோது அதற்கு எனக்கு உருவம் கொடுத்தது என்றால் சமுத்திரக்கனி தான். சினிமாவில் பல பேர் என்னை பயன்படுத்துவார்கள்.. பயணம் செய்வார்கள்.. ஆனால் சமுத்திரக்கனி மட்டும்தான் என்னை பயன்படுத்தி பயணம் செய்து பக்கத்திலும் இருப்பவர். என் வீட்டில் யாராவது ஏதாவது என்னை சொன்னால் கூட என் தம்பி சமுத்திரக்கனி இருக்கிறான்.. அவனிடம் சென்று விடுவேன் என்று கூறி தான் அனைவரையும் மிரட்டி வருகிறேன். 