ராஜா கிளி .( விமர்சனம். ) செத்த கிளிக்கு தங்கக் கூண்டு !குருவி லேகிய ராஜா !

கடந்த ஆண்டு கடைசியில் வெளிவந்த படங்களில் ராஜா கிளி ஒரு வகையில் முக்கியமானது. தந்தையை தனயன் இயக்கிய படம் அது. கல்லாவை நிரப்பியதா ?  அது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கவலை !நமது கவலை பட்டியலில் இடம் கொடுத்தாக வேண்டும்.!

பார்வையிலேயே தெரிந்து விடுகிறது  ‘முருகப்பனின் ‘ மரபணு.  ! இரண்டு தொழிற்துறை சார்ந்த பிரபலங்களை ஒற்றைக் கேரக்டரில் கதாசிரியர் கொண்டு வந்திருக்கிறார்.’மரபணு’ சார்ந்த நுண்ணறிவு ஆய்வுக்குள் செல்லாமல் ராஜா கிளி யைப் பற்றி மட்டுமே பார்க்கலாம்.

இயக்கம் உமாபதி ராமையா. அர்ஜூனின் மருமகன் ,தம்பி ராமையாவின் மகன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் மாதிரி.!

ராஜாவாக தம்பி ராமையா . தொழிலதிபர். முருக பக்தர் முருகப்ப சென்றாயர் . இவரது நிறுவனங்களில் அப்பன் முருகனின்  பதுமையை பார்க்கலாம் . பக்திமான். இவரது குரு சிவனடியார் பழ கருப்பையா . குருவிடம் ஆலோசனை கலக்காமல் எதையுமே செய்ய மாட்டார் முருகப்பர். மனைவியைப் பிரிந்து வாழ்கிற தொழிலதிபர் தனது நிறுவனத்தில் பணி புரிபவரின் மனைவியை கல்யாணம் செய்து கொள்கிறார். இதனால் அவர் எதிர்கொள்கிற சிக்கல்கள் . சிறை வாசம் என கதையைக் கொண்டு செல்கிறார்கள். வசனம் எழுதியவரை  சிம்மாசனத்தில் உட்கார வைத்து செங்கோல் கொடுக்கலாம். பின்னிருக்கே சாமி!

முருகப்பர் கேரக்டரில் தம்பி ராமையா. நடையில் ஒரு சாராரின் சாயல் இருக்கிறது. சில இடங்களில் சிறப்பு,பல இடங்களில் கடுப்பு. ஆனால் உச்சக் கட்டத்தில் மன நலம் இல்லாதவராக வருகிற கட்டத்தில் பரவாயில்லையே என சொல்ல வைக்கிறார். தேர்ந்த நடிப்பு.

முருகப்பரின்  முதல் மனைவியாக  விஜய் டி. வி. தீபா, கணவனுக்கு சாபம் விட்டு கதறுகிற கேரக்டர். இரண்டாம் மனைவியாக சுபா, இளம்காதலியாக சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 40 களில் சாதாரணமாக மனைவி ,வைப்பு ,தொடுப்பு என்பதெல்லாம் சாதாரணம்.  இந்தப்பழக்கம் தற்போது அற்றுப் போய் விட்டதாக சொல்ல முடியாது. அரசியலில் சகஜமப்பா என்கிறார்கள்.   நல்ல வேளை ,அரசியலுக்கும் கதைக்கும் தொடர்பில்லை . 

நட்புக்கு அடையாளமாக சின்னவேடமெனினும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்  சமுத்திரக்கனி.

ஜூனியர் வாரியார் மாதிரி பழ. கருப்பையா . போலீஸ் அதிகாரி அருள் தாஸ். இன்னும் சிலர் சரியான நேரங்களில் வந்து போகிறார்கள். ஆனால் மன நல காப்பகத்தில் ஒரு தாடி வாலா டேனியல் நடிப்பை பிதுக்கி எடுத்திருக்கிறார். நல்ல வேளை பரவலாக ஊடுருவவில்லை. 

தம்பி ராமையாவே இசையமைத்திருக்கிறார்.பட்ஜெட் படங்களுக்கு பயன்படுவார்.

உண்மைச் சம்பவங்களை காயமில்லாமல் கதைப் படுத்தி இருக்கிறார்கள். 

மொத்த உழைப்பிலும் தயாரிப்பாளரின் வியர்வை அதிகம். 

காப்பாற்றுவார்களா ரசிகர்கள்?

–தேவிமணி.