சினிமா உலகிலும் ஆணாதிக்கம்!- நித்யா மேனன்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், காதலிக்க நேரமில்லை.இப்படத்தின் வெளியான போஸ்டர்களில் , ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் தரப்பில் பெயர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன் பேசுகையில்,” இது பெரிய விஷயம். மேலும் ஒரு நல்ல விஷயம். சினிமாவில் என்னதான் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியம் இருந்தாலும் நடிகைகள் பெயர்களை முதலில் போடுவது குறித்து யாரும் யோசிப்பதில்லை. நான் இதற்கு முன்னரும் பெண் இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், இப்போதுதான் இது நடைபெற்றுள்ளது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இருக்கும் சினிமா உலகிலும் ஆணாதிக்கம் உள்ளது. இந்த விஷயத்தைச் சொன்னதும், ஜெயம் ரவி ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். என்னிடம் பலரும் எப்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாகியுள்ளது” என பேசினார்.
தொடர்ந்து நாயகன் ஜெயம்ரவி இவ்விவகாரம் குறித்து பேசுகையில்,”“ நான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குநருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இதுவரை எனக்கு இருந்த பார்வையை அவர் மாற்றிவிட்டார். எப்போதும் ஒரு ஆணின் பார்வையில் இருந்தே, அனைத்தையும் அணுகிப் பழகிய எனக்கு பெண்ணின் பார்வை குறித்து கிருத்திகா உதயநிதி சொல்லிக் கொடுத்துள்ளார்”.இவ்வாறு அவர் பேசினார்