நடிகர் விஜய்யை நசுக்கி விட நினைப்பது நியாயமே கிடையாது! நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி !!
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளவர், ஆளும்கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல; கட்சித் தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். நாங்கள் தான் அடுத்த ஆட்சி, நாங்கள் தான் அடுத்த முதலவர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.என பேசினார். திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் விஜய்யை தான் முதல்வர் மறைமுகமாக தாக்கி பேசினார் என கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடு குறித்து சாத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இக்கேள்விக்கு பதிலளித்து நடிகர் இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது,”நடிகர் விஜய்க்கு அரசியல் எல்லாம் அவசியமே இல்லை.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அதையெல்லாம் துச்சமாக உதறித் தள்ளிவிட்டு மக்களுக்கு ஏதோ செய்கிறேன் என வரும் போது அவரை ஆரம்பத்திலேயே நசுக்கி விட வேண்டும் என நினைப்பது எல்லாம் நியாயமே கிடையாது.நம்ம நாடு ஒரு ஜனநாயக நாடு. இதில், இவங்கதான் ஆட்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்கள் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றும் மக்களுக்காக உழைக்கக் கூடாது என்றும் சொல்லும் உரிமை யாருக்குமே இல்லை. புதுசா அரசியலில் மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு வரும் விஜய்யை வரவேற்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவரை காலி செய்யும் விதமான செயல்களை தவிர்த்தாலே போதும்.பொதுவாக சினிமாவில் இருந்து சில நடிகர்கள் அரசியலுக்கு ஆர்ப்பாட்டமாக வருவார்கள். ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றதும் மறுபடியும் அவர்கள் சினிமா பக்கமே திரும்பி விடுவார்கள். அரசியலில் அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக உழைக்க மாட்டார்கள். அதே போல விஜய்யும் செய்துவிடுவார் என்கிற சந்தேகம் சிலருக்கு இருந்தாலும், அதை நாம் முதலிலேயே சொல்லி சொல்லி செய்ய வருபவரையும் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.