வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !
தமிழ் திரை உலகில் இதுவரை எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேய் கதை’.
ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் ஜெர்ரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திறமையான புதுவரவாக நாயகனாக அறிமுகமாகிறார் வினோத். இவர் சர்வதேச சரக்கு போக்குவரத்து துறையில் முன்னணி தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பேய் கதை’ குழுவினர் வெளியிட்டுள்ள முதல் பார்வை வீடியோ மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதோடு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளன.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஜெர்ரி, “கிரிக்கெட் விளையாட செல்லும் நண்பர்கள் எதிர்பாராத சூழல் ஒன்றில் சிக்குகிறார்கள், அவர்கள் அதிலிருந்து தப்பினார்களா இல்லையா என்பது தான் கதை. பேய் படங்களில் நாம் இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் ‘பேய் கதை’ இருக்கும். இந்த வித்தியாச முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ஜுன் மோசஸ். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், ஸ்ரீ சுமந்த், ஆஷிக் பீட்டர், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பேய் கதை’ திரைப்படத்திற்கு பிரவீன் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசையமைக்கிறார், ரோஷன் பிரதாப் ஜி படத்தொகுப்பை கையாளுகிறார்.

ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில் வினோத் நாயகனாக நடிப்பில் சர்வதேச தரத்தில் தமிழில் உருவாகும் ‘பேய் கதை’ திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.