சூதாட்ட செயலி: 29 நடிகர்,நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்கு!
முன்பெல்லாம் நேரில் சந்தித்து சூதாடி தங்களது பணத்தை இழந்து வந்தார்கள். இப்போது டிஜிட்டல் உலகம் என்பதால் ஃபோனிலேயே ஆன்லைனில் பணத்தை கட்டி சூதாடிவருகிறார்கள். அப்படி சூதாடுவதற்காக வெவ்வேறு பெயர்களில் ஏகப்பட்ட செயலிகள் கொட்டி கிடக்கின்றன.இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியில் பணத்தை போட்டு இழந்தவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே இதில் சிக்கி மீள முடியாமல்; பணத்தை இழந்து, இருக்கிற சேமிப்பையும் தொலைத்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்லாம் அரங்கேறியது.இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.சட்டவிரோத சூதாட்டம் செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி,நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லாஉள்ளிட்ட 29 நடிகர்,நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இவர்கள் அனைவருக்கும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் கிடைத்த வருவாய் மூலமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊதியம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 29 பிரபலங்களையும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அடுத்த 2 நாட்களில் சம்மன் அனுப்ப, திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது