“லோகா: சாப்டர் 1 -சந்திரா” 5 பாகங்களாக வெளியாகும் -துல்கர் சல்மான் தகவல்!

துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “லோகா: சாப்டர் 1 – சந்திரா” படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு சென்னையில் நடந்தது.இந்நிகழ்வினில் நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசியதாவது,”நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன்.இப்படத்தை கேரள அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம். இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இந்த வெற்றி “லோகா: சாப்டர் 1 – சந்திரா” படக்குழுவினருக்கானது தான். கல்யாணியைத்தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே ‘செட்’ ஆகமாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் சூப்பர் ஹீரோயினாக பொருந்தி இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்