’மதராஸி’ – விமர்சனம்!
‘லட்சுமி மூவிஸ் நிறுவனம்’ தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சபீர் கல்லரக்கல், ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், விக்ராந்த் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், மதராஸி. எழுதி இயக்கியிருக்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆயுதக்கடத்தல் காரர்களான வித்யூத் ஜம்வால், சபீர் கல்லரக்கல் இருவரும், தமிழ் நாட்டிற்குள் பெரிய அளவிலான எண்ணிக்கையில் துப்பாக்கிகளை கடத்தி வந்து விடுகின்றனர். அவற்றை பல மாவட்டங்களுக்கும் விநியோகிக்க முடிவு செய்கின்றனர். இதை அறியும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி அவர்களை பின் தொடர்கிறார். அப்போது அவர்களை பிடிப்பது வெகு சிரமம் என்பதால் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுத கிடங்கை, தற்கொலை தாக்குதல் மூலம் தகர்க்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில், காதலில் தோல்வியடையும் சிவகார்த்திகேயன், தற்கொலைக்கு முயல்கிறார். இதனை தனக்கு சாதகமாக பயண்படுத்தும் பிஜு மேனன், அவர் நினைத்தை சாதித்தாரா? சிவகார்த்திகேயனின் காதல் என்ன ஆனது? ‘மதராசி’ படத்தின் கதை.
சிவகார்த்திகேயன், வழக்கமான தனது கலகலப்பான, திறமையான நடிப்பினை வழங்கியிருக்கிறார். மன நிலை பாதிக்கப்பட்டவராகவும், ருக்மணி வசந்த்தின் காதலராகவும் மனம் கவருகிறார். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில், அதிரடி கிளப்பியிருக்கிறார். துப்பாக்கிச் சண்டைக்காட்சிகள் சிறப்பு கவனம் பெறுகின்றன.
சிவகார்த்திகேயனின் காதலியாக ருக்மணி வசந்த், அழகாக இருப்பதோடு சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
வித்யூத் ஜம்வால், சபீர் கல்லரக்கல் இருவரும் டெரர் வில்லன்களாக நடித்துள்ளனர். இவர்களில், வித்யூத் ஜம்வால் சிறப்பு கவனம் பெறுகிறார்.
பிஜூ மேனன், விக்ராந்த், ‘ஆடுகளம்’ நரேன், ‘தலைவாசல்’ விஜய் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.
சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. அனிருத்தின் இசையமைப்பு இரைச்சல். பாடல்களும் கவனம் பெறவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், லாஜிக்கே இல்லாமல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார். அது ‘கிரிகாலன்’ மேஜிக் ஷோவாக ஆகிவிட்டது. பெரிய அளவில் ரசிகர்கள் பலத்தைக் கொண்ட சிவகார்த்திகேயனை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படமா? என யோசிக்க வைத்து விடுகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸின் தவறுகள், சிவகார்த்திகேயனின் ஆளுமையால் மறைக்கப்பட்டுள்ளது.
’மதராஸி’ திரைப்படத்தை, சிவகார்த்திகேயன் என்ற ஒற்றை மனிதருக்காக பார்க்கலாம்.