காந்தா (விமர்சனம்) தனித்துவமான படைப்பு!

‘ஸ்பிரிட் மீட்யா’ மற்றும் ‘வேஃபேரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியாரது தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘காந்தா’. அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கும், அந்த சூப்பர் ஸ்டார் நடிகரை உருவாக்கிய பிரபல இயக்குநருக்கும், இடையே உள்ள ஈகோ பிரச்சனை. இந்த ஈகோ பிரச்சனையின் காரணமாக ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை யார் செய்தது? என்பது தான், ‘காந்தா’ படத்தின் கதை.
‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், பிரபலமான ஒரு பாகவதரை மனதில் கொண்டு, தனது கற்பனையான திரைக்கதையுடன், சாமார்த்தியமாக படமாக்கியிருக்கிறார். அதாவது, ‘’ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்.., பூசாத மாதிரியும் இருக்கணும்.’’ துல்ஹர் சல்மான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் TKM. ஆனால், MKT இல்ல! அதுபோல் அவரது முதல் படம், ‘அமரக்கொடி’. பவளக்கொடி இல்ல! இப்படி பல சம்பவங்கள் 1930 களில், மதறாஸ் மாகாணத்தில், திரையுலகில் நடந்த ஒரு கொலையை, க்ரைம் த்ரில்லர் டிராம பாணியில் கற்பனை கலந்து, ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள். இதில், பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன என்றால், பழைய சினிமா வரலாறு தெரியாதவர்களுக்குக்கூட இந்தப்படம் பிடிக்கும். குறிப்பாக, “Gen Z” தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் இருப்பதுதான். இந்தப் படத்தின் வெற்றி. சரி கதைக்கு வருவோம்.
சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படும் பரம ஏழை, (துல்ஹர் சல்மான்) மஹாதேவன். கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் அவரை, பிரபல இயக்குநர் (சமுத்திரக்கனி) கோதண்டராமன் அய்யா தன்னுடன் அழைத்து வந்து, நடிப்புப்பயிற்சி அளிக்கிறார். காலப்போக்கில் நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, திரையுலகில் தவிர்க்க முடியாதவராய், சூப்பர் ஸ்டார் ‘MKT’ யாக உயர்ந்து நிற்கிறார். இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், அய்யா, ‘MKT’ யை அழைத்து ‘சாந்தா’ என்ற படத்தினை இயக்க விரும்புகிறார். அந்தப்படத்தை ‘மாடர்ன் ஸ்டுடியோ’ (மாடர்ன் தியேட்டர்ஸ் அல்ல!?) மார்ட்டின் (ரவீந்தர் விஜய்) தயாரிக்க முன் வருகிறார்.
‘MKT’ க்கு கதை பிடித்திருந்தாலும், க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை. அதனால், க்ளைமாக்ஸை மாற்றச் சொல்கிறார். அதன் பிறகு, தலைப்பும் மாற்றப்படுகிறது. இதனால், இருவருக்குள்ளும் மோதல் வெடிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்திலேயே ‘சாந்தா’ படத்தின் கதாநாயகி ராஜகுமாரி (பாக்யஶ்ரீ போர்ஸ்) கொல்லப்படுகிறார். என்ன நடந்தது? நாயகி ஏன் கொல்லப்பட்டார்? காரணம் என்ன? இது தான், காந்தா படத்தின் மீதிக்கதை!
‘காந்தா’ படத்தின் மிகப்பெரிய பிரமிப்பு!, நடிப்புச் சக்கரவர்த்தி ‘MKT’, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்ஹர் சல்மான் தான். அவர் நடித்த அத்தனை காட்சிகளிலும், அதகளம் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், தன்னுடைய தனித்த திறமையினை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றார் போல், நடை, உடை, பாவனை என அனைத்திலும், தன்னை மாற்றிக் கொண்டு நடிப்புச் சக்கரவர்த்தியாகவே ஜொலிக்கிறார். அனைத்துவிதமான உணர்வுகளையும் காட்சிக்கு ஏற்ற மாதிரி வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். குறிப்பாக , “Gen Z” தலைமுறை ரசிகர்களை.

துல்ஹர் சல்மான், முகம் பார்க்கும் கண்ணாடியில் முட்டிக்கொண்டு நடிக்கும் காட்சியிலும், பாக்யஶ்ரீ போர்ஸின் கைகளை பிடித்து, தன் கண்ணத்தில் அறைந்து கொண்டபடி நடிக்கும் காட்சியிலும் சூப்பரோ சூப்பர். இந்தக்காட்சியில், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) அயிட்டத்தை மட்டுமே நம்பி நடிக்கும், நடிகர்களுக்கு கிலி ஏற்படுத்துகிறார். இதுவரை பார்த்திராத துல்ஹர் சல்மான். தேசிய, மாநில விருதுகள் உள்ளிட்ட, பல்வேறு விருதுகள் குவிவது, உறுதி.
நடிகை குமாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ், பழம் பெரும் நடிகைகளின் அச்சு அசல், சாயலாகவே தோன்றியிருக்கிறார். வசீகரமான அழகுடன் நடிப்பிலும் மிளிர்கிறார்.
கொலையைப் பற்றி விசாரிக்கும், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி. சற்றே முரண்பட்ட நடிப்புடன், ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
பழம்பெரும் இயக்குநராக நடித்திருக்கும் சமுத்திக்கனி, வித்தியாசமாகவே இருக்கிறார். உதவி இயக்குநராக கஜேஷ் நாகேஷ். கவனம் பெறுகிறார். துல்ஹர் சல்மானின் மனைவியாக காயத்ரி. பெரும் செல்வந்தராக நிழல்கள் ரவி. ஸ்டுடியோ அதிபராக ரவீந்திர விஜய். கமிஷனர் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் உள்ளிட்டோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், ஜானு சந்தர். ரசிக்கும்படி இருக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றியுள்ள டானி சான்செஸ்-லோபஸ், ஒளிப்பதிவினை செய்திருக்கிறார். சிறப்பாக இருக்கிறது. அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படமாக நன்கு உணரமுடிகிறது, இவரது ஒளிப்பதிவினால். அதிலும் நடிகர்களுக்கு வைக்கப்படும் கோணங்கள் சூப்பர். துல்ஹர் சல்மானின் வெவ்வேறு காலக்கட்டத்தில், அவரது முக வடிவமைப்பினை பல கோணங்களில் படம்பிடித்து, அந்த காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.
கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கலை இயக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால், முதல் ஷாட்டில் காட்டப்படும் செய்தித்தாளில் உள்ள எழுத்துக்கள் அந்தக் காலத்து எழுத்துக்கள் இல்லை! இது மாதிரியான சில ஆங்காங்கே தென்படுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் செல்வமணி செல்வராஜ், காந்தா திரைப்படத்தினை, திரையுலக வரலாறு தெரியாத ஒருவர் பார்த்தாலும், அது ரசிக்கப்பட வேண்டும். எனபதில் கவனமாக இருந்து, அனைவரும் ரசிக்கும் வண்ணமாக விறுவிறுப்பான ஒரு படத்தினை கொடுத்துள்ளார்.
‘காந்தா’ தனித்துவமான படைப்பு!