‘கொம்பு சீவி’. (விமர்சனம்.) சிவகார்த்திகேயன் தப்பித்தார்?!

‘ஸ்டார் சினிமாஸ்’ சார்பில், முகேஷ் டி.செல்லையா தயாரித்து, பொன்ராம் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம், கொம்பு சீவி. இதில் சரத்குமார், சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், தார்ணிகா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர், மதன் பாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பல படங்களின் தலைப்பும், அதன் கதைக்கும் சம்பந்தம் இருக்காது. அப்படித்தான் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும், ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. பொதுவா, ‘கொம்பு சீவி’ விடுவது என்பது, ஒருவரை உசுப்பேத்தி அவரை வீண் சண்டைக்கு தயார் செய்வது. இது ஒரு வழக்கமான சொல். ஓகே, கதைக்கு வருவோம்.
‘வைகை அணை’ பகுதி மக்களான ஆண்டிபட்டி, வருசநாடு, கன்னிசேரி, மேலக்காமக்காபட்டி, கீழக்காமக்காபட்டி இன்னும் சில கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வியலை சொல்வதாக, கதை அமைத்திருக்கிறார், இயக்குநர் பொன்ராம். அதாவது , வைகை அணை முழுக்கொள்ளளவு எட்டும் போது, பல கிராமங்களின் விவசாய நிலங்கள் தண்ணீரிக்குள் மூழ்கி விடுகிறது. அதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், அந்த மக்கள் சாராயம், கஞ்சா என சட்டவிரோதமான செயலில் ஈடுபடுகின்றனர். இவர்களில், மிகப்பெரிய கஞ்சா வியாபாரியாக இருப்பவர் சரத்குமார். அதில் கிடைக்கும் வருமாணத்தை தன்னுடைய ஊர் மக்களுக்கே கொடுத்து வருகிறார். அவருக்கு உதவியாக, சண்முகப் பாண்டியன் விஜயகாந்த் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆந்திராவுக்கு 5 கோடி அளவு மதிப்புள்ள கஞ்சாவை, சரத்குமாரும், சண்முகப்பாண்டியனும் கடத்தி செல்கின்றனர். கஞ்சா புழக்கமும், சரத்குமாரால் போலீசுக்கு ஏற்படும் தொல்லையாலும் அவரை சுட்டுக்கொல்ல, போலீசார் திட்டமிடுகின்றனர். அது நடந்ததா? இதுவே, ‘கொம்பு சீவி’.
‘கொம்பு சீவி’ படத்தின் முதல் பாதி, அடிதடி ஆக்ஷன், காமெடி என செல்கிறது. இரண்டாவது பாதி செண்டிமெண்ட், கஞ்சா கடத்தல், விற்பனை என செல்கிறது. ஆனால், எதுவுமே அழுத்தமாக இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிக மோசம். அதோடு, மகாமட்டமான திரைக்கதை ஆக்கம். எந்த காட்சியையும், முழுதாக ரசிக்கமுடியவில்லை. க்ளைமாக்ஸ் வருவதற்கு முன்னரே, அய்யோ சாமி, ஆள விடுங்கப்பான்னு ரசிகர்கள் ஓடிவிடுகின்றனர்.
ரொக்கப்புலி, எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சரத்குமார். வழக்கமான தனது பங்களிப்பை அளித்து, படத்தை அவ்வப்போது தாங்கிப்பிடிக்கிறார்.
பாண்டி, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், முந்தைய படங்களுக்கு, இதில் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் மஜ்னு கதாபாத்திரத்தில், நடித்திருக்கும் தார்னிகா, வழக்கமான சினிமா கதாநாயகியாக வந்து போகிறார். சரியான படங்கள் கிடைத்தால், வெற்றி கதாநாயகியாக வலம் வருவார். இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் தார்ணிகா, ‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த, ராணியின் மகள்.
மற்றபடி, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர், மதன் பாப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், பெரிதாக மெனக்கெடவில்லை. அவசரத்தில், கதாபாத்திரங்களை உருவாக்கி, ஏனோ தானோ என்று வாரிச் சுருட்டிக்கொடுத்துள்ளார். இந்தக்கதையில், சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சித்தார், இயக்குநர் பொன்ராம். நல்ல வேளை தப்பிவிட்டார், அவர்!