பராசக்தி: திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்! கமல்ஹாசன் பரபரப்பு கடிதம் .

 

சிவகார்த்திகேயன்,ரவிமோகன்,அதர்வா முரளி ஆகியோரது நடிப்பில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பராசக்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகரும் மக்கள் நீதிமய்யக்க்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி.வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,”அன்புள்ள இளவல் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பராசக்தி படத்தை பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ‘பின்குறிப்பு’:என குறிப்பிட்டு, ‘பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோஃபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்’ என்றும் கூறியுள்ளார்.இக்கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது