‘மட்டம்’ தட்டிய இளையராஜாவுக்கு ‘பாடம்’ கற்பித்த பாக்யராஜ்!

இயக்குநர், நடிகர் பாக்யராஜ். . இவர் திரையுலகில் தனது 50 ம் ஆண்டினை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட  திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா  பேசுகையில்,”நான் 16 வயதினிலே படத்திற்கு பின்னணி இசை அமைத்துக் கொண்டு உள்ளேன். அப்போது, திடீரென ஒரு குரல், ‘கட்… கட்.. கட்’ என்று கத்துகிறது. யார் என்று திரும்பிப் பார்த்தால் அது பாக்யராஜ். யாரு இது என்று பாரதிராஜாவிடம் கேட்க, அவர் இவர் குறித்துச் சொன்னார்.

இதனால் அவரை நான் ரொம்பவும் மட்டமாகத்தான் நடத்தி வந்தேன்.ஒருமுறை பாரதிராஜா கதை சொல்ல முடியாமல் போக, பாக்யராஜ் கதை சொல்வார் என்று பாரதிராஜா கூறினார். நானோ, ஏன் இப்படி கண்டவர்களை எல்லாம் கதை சொல்ல வைக்கிறாய் என்று கேட்டேன். பாக்யராஜும் வந்து கதை சொன்னார். எனது வாழ்க்கையில் ஒருவர் கதை சொல்வதைப் பார்த்து நான் மிகவும் வியந்தவர்களில் இவரும் ஒருவர். அவர் கதை சொன்னதைக் கேட்டு கேட்டு, சிரித்து சிரித்து எனக்கு வயிறு எல்லாம் புண் ஆனது போல மாறிவிட்டது.அதில் இருந்து தான் நான் ஒரு முடிவெடுத்தேன், யாருக்குள் என்ன திறமை இருக்கும் என்பதை தீர்மானிக்க நாம் யார் என்று யோசித்தேன்.

அன்றில் இருந்து புது இயக்குநர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு படம் பண்ணுவது என்று முடிவெடுத்தேன். நான் அப்படிப்பட்ட முடிவு எடுக்க முக்கிய காரணமே, பாக்யராஜ் தான். எனக்கு பாடம் கற்பித்தவர் பாக்யராஜ். நான் அவரிடம் கற்றுக் கொண்ட பாடம் இதுதான்.” இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில்,”“ பிப்ரவரி 3ஆம் தேதியுடன் நான் எனது புதிய ஸ்டூடியோவுக்கு வந்து 5 ஆண்டுகளை நிறைவு பெறுகிறது. மேலும் நான் எனது இரண்டாவது சிம்பொனியை பெரும்பாலும் முடித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.