வங்கி கொள்ளையின் போது தற்செயலாகப் பிணைக் கைதியாக்கப்படும் ராஜீவன் (பிரித்விராஜ்), விபத்தில் கொள்ளையர்கள் இறந்ததும் முதன்மைச் சந்தேக நபராய் மாறுகிறார். “தொடர்பே இல்லாத வங்கிக்கு அவர் ஏன் சென்றார்?” என்ற ஒற்றைக் கேள்வியால் போலீஸும், ஊடகங்களும் அவரது நிம்மதியைக் குலைக்கின்றன. இதிலிருந்து அவர் தப்பிக்க முயலும் ஒவ்வொரு செயலும், அவரை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளுகிறது. விடுபட முடியாத அந்தச் சிக்கலில் இருந்து அவரும், அவர் குடும்பமும் எப்படி மீண்டார்கள்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே? என்பதே ‘ஐ, நோபடி’ படம்.
பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியின் துப்பாக்கி முனையிலும், வீங்கிய கண்களோடு பிணைக் கைதியாக அறிமுகமாகும் இடத்திலும் தன் மௌனத்தாலேயே மிரட்டியிருக்கிறார். மகளிடம் பேசும் சாமானிய தந்தையாகவும், அசாத்திய சண்டைக் காட்சிகளில் காட்டும் நம்பகத்தன்மையிலும் தனித்து நிற்கிறார்.
பிரித்விராஜ் சுகுமாரன் மனைவியாக பார்வதி திருவோத்து, முதுமை கலந்த எதார்த்த முகத்தோடு, இயல்பான முகபாவனைகள் மூலம் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.
ஹக்கிம் ஷாஜகான், அமைதியான முகத்தோடு, பணத்தைத் தேடும் தீவிரமான காவலர் பாத்திரத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளார்.
அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன் மற்றும் பிரித்விராஜ் மகள்களாக நடித்த சிறுமிகள் என அனைவரும் தங்களின் நுட்பமான உடல் மொழி மூலம் படத்தின் பதட்டத்தைக் கூட்டுகிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் தனது ஒளிப்பதிவு மூலம் வாகன விபத்து, பேருந்து சண்டைக்காட்சி, லிஃப்ட் மற்றும் குறுகிய அறைக்குள் நடக்கும் சண்டைகளை வியக்கத்தக்க கோணங்களில் படமாக்கியுள்ளார். ரசிகர்களை பதட்டத்துடனே வைத்திருக்கிறது இவரது ஒளிப்பதிவு.
அதேபோல் ரமீஸ் எம்.பி படத்தொகுப்பும்: வெவ்வேறு கோணக் காட்சிகளைக் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்திற்கு ஏற்பத் தொகுத்து, படத்தின் வேகத்தைக் கூட்டி பார்வையாளர்களைப் படபடப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அமைதியான சூழல்களிலும் மர்மத்தை உடைக்காமல் த்ரில்லரின் தரத்தை உயர்த்துகிறது.
யானிக் பென் குழுவினர் சண்டைக் காட்சிகளை மிரட்டலாக வடிவமைத்துள்ளனர்.
ஒரு சாமானியனின் வாழ்க்கை போராட்டத்தைக் காட்சிக்குக் காட்சி பரபரப்போடும், இறுதிவரை சற்றும் குறையாத பதட்டத்தோடும் கொண்டு சென்ற எழுத்தாளர் சமீர் அப்துலின் அசுரத்தனமான மூளை. நகம் கடிக்க வைக்கும் இயக்குநரின் மேக்கிங் பாணி. ஆகியன படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.
ஆனால், அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் நம்பகத்தன்மையையும், சற்றே சோர்வையும் தருகின்றன. ஹாலிவுட் த்ரில்லர்களைக் கொண்டாடும் ரசிகர்கள், நம்ம ஊர் எதார்த்தத்தோடு, அசாத்திய புத்திசாலித்தனத்துடன் செதுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தையும் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
‘ஐ, நோபடி’ – உங்களை மிரள வைக்கும் க்ரைம் த்ரில்லர்!












