கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர், நடிகர் சிவாஜி ரான்குமாரின் மகன் தர்ஷன் கணேசன், இப்படத்தின் மூலமாக தமிழ்சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஷ்ரித்தாராவ் , அர்ச்சனா, ஜார்ஜ் மரியான் ,ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன்,சுப்பு பஞ்சு,சரவண சுப்பையா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் டிடி பாலச்சந்திரன். இசை, இசைஞானி இளையராஜா. ஒளிப்பதிவு, ஏ எம் எட்வின் சகாய்.
ஷ்ரித்தாராவ் வை காதல் திருமணம் கொண்ட தர்ஷன் கணேசன் வாரிசு அடிப்படையில் பொலீஸ் வேலையில் சேருகிறார். உடலளவில் பலமில்லாத காரணத்தால் போலீஸ் ஸ்டேஷனில் ஒவ்வொரு நாளும் அவர் அவமானப்பட்டு வருகிறார்.
குழந்தையில்லாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் கங்கை அமரனும் ரோஜாவும் தங்களது குழந்தையாக பாவித்து ஒரு ஆட்டினை வளர்த்து வருகின்றனர். அந்த ஆடு மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும், யுகேந்திரனுக்கு சொந்தமான லாரியில் அடிபட்டு சாகிறது. அதனால், கங்கை அமரன் யுகேந்திரன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். அதை வாங்க மறுக்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கெட் அவரை அடித்து அவமானப்படுத்துகிறார்.
கங்கை அமரன், அந்த ஊரின் நேர்மையான வி ஏ ஓ அர்ச்சனாவிடம் மணல் கொள்ளை குறித்தும், ஆடு பலியானது குறித்தும் முறையிடுகிறார். அவருக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து கொடுத்ததால் அர்ச்சனா கொலை செய்யப்படுகிறார். அதனால், கோர்ட் கங்கை அமரனுக்கு பாதுகாப்பு கொடுக்க போலீஸ்காரர் தர்ஷனை நியமிக்கிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது?தான், ‘லெனின்பாண்டியன்’.
‘லெனின்பாண்டியன்’ படத்தின் மூலமாக அறிமுகமாகும் இயக்குநர் டிடி பாலச்சந்திரன், முதல் பாதியை எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மிக நேர்த்தியாக இயக்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதி தடுமாற்றத்துடனும் நேர்த்தியற்ற க்ளைமாக்ஸுடனும் முடிகிறது.

கங்கைமரனின் நடிப்பு ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அவரது மனைவியாக நடித்திருக்கும் ரோஜாவின் நடிப்பு வெகுவாக ஈர்க்கவில்லை. ஒரு சில காட்சிகளில், வி ஏ ஓ வாக நடித்திருக்கும் அர்ச்சனாவின் நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்து வாரிசாக வந்துள்ள தர்ஷன் கணேசனுக்கு இதுதான் முதல் படம். அவருடைய தோற்றமும் நடிப்பும், வாரிசு அடிப்படையிலான வேலைக்கு சேரும் போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் வெகுவாக பொருந்திக்கொள்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவண சுப்பையா, போஸ் வெங்கட் இருவரும் கனக்கச்சிதமாக நடித்துள்ளனர். வில்லன்களாக ஆடுகளம் நரேன், யுகேந்திரன் போன்றோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
நீதிபதியாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விடுகிறார். அவர் பேசும் வசனங்கள் பலத்த கைத்தட்டல்களை பெறுகின்றன.
இயக்குநர் டிடி பாலச்சந்திரன், மிகப்பெரும் பலம் பொருந்திய மணல் மாஃபியாக்களை சித்தரித்த விதம் நிஜம்!
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கங்கை அமரன், ரோஜ சம்பந்தப்பட்ட காட்சியில் ‘முதல் மரியாதை’ பி ஜி எம் இடம் பெறுவது, கேலிப்பொருளாக மாறிவிட்டது!
‘லெனின் பாண்டியன்’ – வரவேற்கப்பட வேண்டியவன்!












