கௌரவ தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ்,ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார் . திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜோதி தேஷ் பாண்டே, குணீத் மங்கா கபூர் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
டோரதி, படத்தை பார்த்த பிறகு, இது முழுக்க முழுக்க சர்வதேச அங்கீகாரத்தையும், விருதுகளையும் பெறுவதற்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்டுள்ள படமாகவே கணிக்க முடிகிறது. அதாவது, (Transgender ) மாற்றுப் பாலினத்தவர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆதரவாக உரத்த குரல் கொடுத்திருக்கிறார், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்.
பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்களாக ஒரே ஊரில் வசித்து வரும் சுப்பு (சனந்த்), கார்த்திக் ( ரிஷி காந்த்) இருவரும் இணை பிரியாமல் வளர்ந்து வாலிப வயதினை அடைகிறார்கள். எப்போதும் குடி. அடிதடி இவைகளே இவர்களின் அன்றாட செயல்கள். கார்த்திக் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ஒரு நாள் சுப்புவை கொலை செய்ய, அவருடைய அப்பாவும் அவர்களது சகோதரர்களும் கார்த்திக்கிடம் சொல்கிறார்கள். ஏன் அப்ப்டி சொல்கிறார்கள். தனது பால்ய நண்பனை அவர் கொலை செய்தாரா இல்லையா. இதுவே டோரதி படத்தின் கதை. படம் முழுவதும் வன்முறை வரம்புகள் மீறிய காட்சிகள் மதுரையில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சுப்புவாக நடித்திருக்கும் சனந்த் கதையின் பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியாக நடித்திருக்கும் ரிஷிகாந்த் கிடைத்த காட்சிகளில் நடித்து திறமையை நிரூபித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். திரைக்கதைக்கு பெரிதாக உதவில்லை.
படத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், ராம்ஸ், முத்துக்குமார் ஆகியோரும் பெரிதான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.
எழுதி இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்பராஜ்ஜின் நேர்த்தியற்ற திரைக்கதையும், வலுவற்ற கதாபாத்திர வடிவமைப்பும் படத்தின் பிரதான பலவீனமாக இருக்கிறது. பல காட்சிகள் வலிய திணிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஆபாச படம் பார்க்கும் காட்சி எதற்காக, அது திரைக்கதைக்கு எந்த விதமாக உதவியது என்பது, கார்த்தி சுப்புராஜூக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!?
திரைக்கதையை பொறுத்தவரை பல இடங்களில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். குறிப்பாக அடுத்தடுத்து வரும் காட்சியில், சனந்த் வட மொழி தெரிந்தவர் போலவும், தெரியாதவர் போலவும் சித்தரிக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷ் க்கு என்ன ஆயிற்று என்பதில் தெளிவற்ற தன்மை. மேலும் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதால், டோரதியை ரசிக்க முடியவில்லை!
’டோரதி’ – முழுமையற்ற படைப்பு!












