தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70 வது பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடந்தது .இதில், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்படச் சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மூத்த நடிகைகள் குத்து விளக்கேற்றி வைத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்குழுவை தொடங்கி வைத்தனர். இக் கூட்டத்தில் மறைந்த திரைக் கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது .விழாவில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகை லதாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும், நாடகத் துறையைச் சேர்ந்த சிறந்த 5 கலைஞர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
பொதுக்குழு நிறைவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் நாசர், “பொதுக்குழு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆனால், பொதுச்செயலாளர் விஷால் இதில் கலந்துகொள்ளாதது எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. திரைப்பட படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடித்தபோது கீழே விழுந்து அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவரால் பங்கேற்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணைத் தலைவர் கருணாஸ், நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள் கட்டிடத்தை திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியவர், நடிகர் சங்க கட்டிடத்தை திறந்து வைக்க,தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தபோது வாய்மொழியாக அழைப்பு விடுத்திருந்தோம். அவரும் கண்டிப்பாக வருகிறேன் என உறுதியளித்துள்ளார். விரைவில் திறப்பு விழா தேதியை முடிவு செய்து முதலமைச்சருடன் கலந்துபேசி அதிகாரப்பூர்வமாக அழைப்போம்.பணத்திற்காக பிரபலங்களை இழிவாக பேசுவது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும். இதுவரை தவறான தகவல்களை பரப்பிய 9 யூடியூபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்வோம்” என்றார்.












