தற்போதைய தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று (ஜூலை 30) இயக்குனர்கள் சங்கத் தேர்தல் (2017-2019) நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் இந்த இயக்குனர்கள் சங்கத்தில் 3,400 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில், கிட்டத்தட்ட 2300 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், தற்போதைய நிர்வாகிகளான தலைவர், விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இத்தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார்.
மோதும் அணி விவரம்:
புது வசந்தம் அணி சார்பில், தலைவர் பதவிக்கு, விக்ரமன். செயலாளர் பதவிக்கு, ஆர்கே செல்வமணி. பொருளாளர் பதவிக்கு பேரரசுஆகியோரும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கேஎஸ் ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ வெங்கடேஷ், அறிவழகன் (எ) சோழன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
புதிய அலைகள் அணி சார்பில், பொருளாளர் பதவிக்கு, ஆ.ஜெகதீசனும் துணைத் தலைவர் பதவிக்கு,வி.சுப்பிரமணியம் சிவா ஆகியோரும்,இணைச் செயலாளர் பதவிக்கு, பி. பாலமுரளி வர்மன், ஜி ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன், ஆ.ராமகிருஷ்ணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.