GM Morgan Films தயாரித்து, இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படம், வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு, கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும்? என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இப்படம், மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி என வித்தியாசமான கதாபாத்திரங்களும், அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் படத்தின் கதைக்களத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. என்கிறது படக்குழு.
‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு நடந்த சந்திப்பின் போது படக்குழு, தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டதாவது,
இந்நிகழ்வினில்…
நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது..,
இந்தப் படத்தின் மூலம் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்கள் கொண்ட படமாக இருக்கும். இதில் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறும். அதேசமயம், ரசிகர்களை மகிழ்விக்கும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல், நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான, சர்ச்சைக்குரிய விஷயங்களையும் இப்படம் தொட்டுச் செல்கிறது. இத்தகைய கருத்துகளைப் பேசினாலும், அவற்றைச் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு பாணியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிறோம். இதுபோன்ற புதிய கருத்துகளைக் கொண்ட, வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி!
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது..,
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் தமிழ்நாட்டைத் தாண்டி, நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. ‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவரும் தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைக் காணவும், அவருடைய வெற்றியைக் கொண்டாடவும் ஆவலுடன் இருக்கிறோம்.
அதேநேரத்தில், இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன். எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சார், ஒன்று முதல் நான்கு படங்கள் வரை மட்டுமே பணியாற்றியுள்ள எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறார். இந்த நவராத்திரியில் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட ஒரே விஷயம், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எங்களைப் போன்ற சிறிய படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். என்றார்.
நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது..,
‘ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாத படமாக ‘டிரோன்ஸ்’ உருவாகியிருக்கிறது. இதில் ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை எனப் பல்வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சிறிய படத்தில் அரசியல் கருத்தையும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்கு தயாரிப்பாளருக்குத் தைரியம் வேண்டும். அந்த வகையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா தயாரிப்பாளர்களும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படமும் அப்படிப் பலரிடம் சென்றடையும் என எதிர்பார்க்கிறேன். இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.












