இயற்கை எழில் கொஞ்சும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்திலிருந்து ஒரு அழகான அமைதியான குடும்பம் பணிமாற்றம் காரணமாக சென்னைக்கு குடியேறுகிறது. அந்த குடும்பத்தின் அழகான குட்டி தேவதை தான் இப்படத்தின் கதாநாயகி அதிதி. ‘அப்பா, சிகரெட் நாத்தம் தாங்கலப்பா’ என்ற அன்பு மகளின் முக வாட்டத்தை போக்க புகை பிடிப்பதையே விட்டு விடும் தந்தை , அவளுக்கு சர்வ சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறார். அந்த சுதந்திரமே அவளுக்கு எமனாகிறது. எந்தக் கவலையும் இல்லாமல், மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும் அவளது வாழ்க்கையில் திடீரென ஒரு புயல் வீசுகிறது. கண்ணே,மணியே எனக் கொஞ்சிய அவளது குடும்பமே அவளை வீட்டை விட்டு துரத்துகிறது. வெளியேறியஅவளுக்கு அடுத்தடுத்து நடக்கும் துயரங்கள் தான் அருவியாய் நம் மனதை நனைத்து நெகிழ வைக்கு இப்படத்தின் திரைக்கதை. திருநங்கை தோழியுடன் தொலைகாட்சி நிலையத்துக்கு சென்று, தன்னை மூன்று பேர் கற்பழித்து விட்டார்கள் என அருவி சொல்ல ஆரம்பிக்க, நிகழ்ச்சி நடத்துபவர்கள் மட்டுமல்ல, நம்மையும் பரபரப்புக்கு ஆளாக்கி விடுகிறார். அதை விட அடுத்த குண்டாக தனக்கு எய்ட்ஸ் எனச் சொல்ல ஆடிப்போய்விடுகிறோம் நாம். தொடர்ந்து அதிரடியாக அந்த நிகழ்ச்சிப் படக்குழுவினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி பரபரப்பை உண்டாக்குகிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களும், அருவி பற்றிய உண்மைகளையும் பார்த்து கண்களின் பொங்கும் அருவியை துடைக்க, நம் கைகள் கர்சிப்பை அணிச்சையாக தேடுவதை தவிர்க்கவே முடியாது. டி.வி.நிகழ்ச்சிகளில் நம் பல்சை எகிற வைத்து, டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்ற, தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் என்னனென்ன தில்லாலங்கடிவேலைகள் செய்கின்றனர் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர்அருண் பிரபு புருஷோத்தமன். கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முன்பான காட்சிகளைப் பார்ப்பதற்கு தனி தைரியம் வேண்டும்.‘சொல்வதெல்லாம் சத்தியம்’ இயக்குநராக கவிதா பாரதி, தொகுப்பாளராக லக்ஷ்மி கோபால ஸ்வாமி, துணை இயக்குநர் பீட்டராக பிரதீப் ஆண்டனி, பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.அதிலும் அந்த ஆஃபீஸ் பாயாக வரும அந்த சின்னப்பையன் மூணு பேரு எப்படின்னே என கேட்கும் விதம் கச்சிதம் . முழு படத்தையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டு அநாயசமாக வலம் வருகிறார் புதுமுகம் அதிதி பாலன்! “இந்தச் சமூகம் என்ன சொல்லுது? நீ என்ன வேணா வேலை செய். இங்க ஒரே ரூல் தான். பணம் சம்பாதிச்சா இந்தச் சமூகம் உன்னை மதிக்கும், பணம் சம்பாதிக்கலைன்னா இந்தச் சமூகம் உன்னை மதிக்காது” என்ற இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின்நீளமான அக்னி வரிகளை எரிமலையாய் வெடித்துள்ளார் நாயகி . தன்னை விசாரிக்கும் போலிஸ்உயர் அதிகாரியின் அதிகார மிரட்டலுக்கு சிறிதும் பயப்படாமல், எங்கே மேல கைய வச்சு பாரு, எந்திரிச்சு போடா…என சிங்கமாய் மாறி கர்ஜிக்கும் போது வேலு நாச்சியாராய் உயர்ந்து நிற்கிறார். கிளைமாக்ஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இப்படி படம் பார்த்து எவ்வளவு நாளாச்சுன்னு மனம் கனக்கவே செய்கிறது.ஒளிப்பதிவு .பின்னணி இசை, கச்சிதமான படத்தொகுப்பு படத்தின் மிகப் பெரிய பலம். மொத்தத்தில் அருவி, இளம்பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடம் சொல்லும் பிரமாண்ட நயாகரா நீர்வீழ்ச்சி.












