நேற்று மாலை ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவச் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘தமிழ் படித்தால் முன்னேற முடியாது, தமிழன் முன்னேறினால் தான் தமிழுக்கே பெருமை’ ‘ உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% மதிப்பெண் மட்டுமே பெற்றேன். எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து கல்லூரி வரும்போது ஆங்கிலம் அவசியம் என்று பேசினார் . ரஜினியின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினியின்இப்பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சினேகன் பேசுகையில், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகணம் கொள்வோம் என்றவர் இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்றார்.