பழுத்த நாத்திகர்கள் பலர் பாதி நாட்களில் மனதுக்குள் பக்தர்களாக இருப்பார்கள். உள்ளே கடவுளும் வெளியில் வெறுப்புமாக வாழ்வதும் அவர்களுக்கு ஒரு சுகம்தான்! கடவுள் மறுப்பு கொள்கை காலம் காலமாக இருந்தாலும் ஆன்மீகத்தின் வளர்ச்சியை தடுக்க முடிய வில்லை.
தெருவோரங்களில் குட்டி குட்டியாக கோவில்கள்.உண்டியல்கள். விழாக்கள். இப்படியாக பக்தி வளருவதைப்போல் நாத்திகம் வளரவில்லை. மக்கள் மனதில் கடவுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்.
தற்போது திருப்பதி வெங்கடாசலபதிக்கு சோதனை வந்திருக்கிறது. மிகுந்த சொத்துகளும் உயர்ந்த வருமானமும் உள்ள ஒரே ஆலயம் இந்தியாவில் திருப்பதி மட்டுமே!
“இந்த கோவிலை பிஜேபி அரசு தனது வசமாக்க திட்டமிடுகிறது. தொல்லியல் பாதுகாப்புத்துறை வசமாக்குவதற்கு மோடி திட்டமிடுகிறார்” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
“பாலாஜியின் ஆபரணம் சொத்து இவை பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.அதன் வழியாக கோவிலை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. திருப்பதி வெங்கடேஸ்வரர் சொத்துகள் மீது கை வைப்பவர்கள் இந்த ஜென்மத்திலேயே தண்டிக்கப்படுவார்கள்..பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது” என்கிறார் சந்திரபாபு நாயுடு.