“கடைக்குட்டி சிங்கம் ” எங்கள் வீட்டுத்தங்கம் என்று ஒவ்வொரு வீடும் கொண்டாடக்கூடிய படம் .இப்படி ஒரு குடும்பப் படத்தைப் பார்த்து எத்தனை வருஷமாச்சுய்யா!
ஏக்கம் பிறந்தது உண்மை!
கூட்டுக்குடும்பத்தின் வலிமை அதில் நிகழும் வம்பு தும்புகள் எல்லாமே சுவையாக சொல்லப்பட்டுள்ளன. காலத்தினால் மறக்கப்பட்ட ஏ.பீம்சிங் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ,பாலமுருகன், ஏ.எல் ,நாராயணன் என எத்தனையோ வித்தகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இவர்களை ஒரே உருவமாக பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த உருவம் தான் இயக்குநர் பாண்டிராஜ்.
பெருநாழி ரணசிங்கத்தில் தொடங்கி கடைக்குட்டி சிங்கம் குணசிங்கம் முடிய அந்த பெருங்குடும்பத்தினர் பெயர்கள் அனைத்தும் தமிழ் தழுவியவை. ரசிகர்களுக்கு போட்டியே வைக்கலாம் . யார் யாருக்கு என்ன பெயர் என்பதை படம் முடித்து வரும் ரசிகர்களிடம் கேட்கலாம். ஒவ்வொரு கேரக்டரும் மனதில் உட்கார்ந்து கொள்கின்றன.
ஐந்து அக்காள்களுக்கு ஒரே தம்பி கார்த்தி .பெண்ணை பெத்த அக்காள்களுக்கு ஆசை இருக்குமல்லவா,தன் மகளை தம்பிக்கு கட்டி வைக்க வேண்டும் என்று! ஆனால் தம்பிக்கு வேறு பெண் மீது காதல். வில்லங்கம் ஏர் கட்டி உழுமா உழாதா? உருக்கமாகவும் ,திருத்தமாகவும் அழுத்திச்சொன்னது இயக்குநரின் பாணி. வாழ்த்துகள் அய்யா! இத்தனை நாட்களாக எங்கேய்யா போயிருந்திங்க.? பீம்சிங்குக்கு ஒரு சிவாஜி கணேசன் கிடைத்தார். பாண்டிராசுக்கு சூர்யா,கார்த்தி என இருவர் கிடைத்திருக்கிறார்கள் .அட்டகாசமாக அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம்.
ஆண் பிள்ளைக்காக மூன்றாவது கல்யாணத்துக்கு பெண்பார்க்கிற சத்யராஜ் மன்னர் மாதிரி!.அதற்கேற்ற கம்பீரமும் திமிரும் செம. இன்னொரு பெண்ணை பிள்ளை காதலிக்கிறான் என்பதை அறிந்ததும் “குடும்பம் உடைந்துவிடாம பார்த்துக்கப்பா”என்று நெகிழும் போது அந்த கேரக்டருக்கு வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடிய வில்லை.
பிரிந்துபோய்விட்ட பெருங்குடும்பத்தை ஒன்று சேர்க்க கார்த்திக் படும் பெரும்பாடு, விவசாயத்தில் கொண்டுள்ள ஈடுபாடு, குடும்பத்தின் மீதான அக்கறை ,சாதி வெறி கொண்ட வில்லனை எதிர்த்து நிற்கும் வீரம் காதலியை கைவிடக்கூடாது என வெயிட்டான கேரக்டர். அதென்னவோ வேட்டி சட்டையில் கார்த்தியை பார்க்கிறபோது நம்மில் ஒருவராகி விடுகிறார், அக்காள்களுக்காக அப்பா சத்யராஜிடம் வாதிடுகிறபோது “இப்படி ஒரு தம்பி தனக்கில்லையே “என ஒவ்வொரு அக்காளும் நினைக்காமல் இருக்கமுடியாது. அவர் நம்ம வீட்டுப்பிள்ளை,
சூரி வாயைத் திறந்தாலே தியேட்டரில் சிரிப்பு அலை. அதிலும் கார்த்தி மேடையில் பேசப் பேச அதற்கு கீழே இருந்தபடியே அடிக்கிற கமெண்ட்ஸ் போலி அரசியல்வாதிகளை புதை குழிக்கு அனுப்பும் சக்தி வாய்ந்தவை.செம! ஒவ்வொரு சித்திகளுக்கும் பட்டப்பெயர் வைப்பது, டி.வி விளம்பரங்களில் நடிக்கும் முதலாளிகளை நோகாமல் நொறுக்குவது என சூரி பெரிய பலவான்.
அர்த்தனாவின் கண்களில் ஆயிரம் கவிதைகள் ,துயரத்திலும் அந்த கண்கள் சொல்கிற சோகம் சூப்பர்.
கார்த்தி- சாயிசா காதல் பசுமைப்புரட்சி.!
ரேக்ளா காட்சி படு மிரட்டல் .இப்படியொரு ரேக்ளா விரட்டலை பார்த்ததில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவின் கம்பீரம் மொத்தக் காட்சிகளில் தெரிந்தாலும் குறிப்பாக ரேக்ளா, சாயிஷா தொடர்பான காட்சிகளில் மின்னுகிறது .சாயிஷாவின் அழகு அவ்வளவு எடுப்பு!
இன்னும் எத்தனையோ நடிகர்கள்.நடிகைகள் இருந்தாலும் விஜி,பானு ப்ரியா வை மறக்க இயலாது.
வெள்ளைக்கார வேலாயியை எங்களால் மறக்க முடியவில்லை இமானின் கிரீடத்தில் இன்னொரு வைரம்.
சாதி வெறி,ஆணவக்கொலை என இருந்தாலும் விவசாயத்தின் அவசியத்தை ஆணி அடித்து சொன்னவிதம் சபாஷ் பாண்டிராஜ். நல்ல டீம் கிடைத்திருக்கிறது.விளையாடுங்கள்.
தவறாமல் தியேட்டருக்கு சென்று பாருங்கள்!
4/ 5 ****