மேற்கித்தியத் தாக்கம் அதிகம் இருந்தாலும் யுவன் சங்கர் ராஜாவிடம் பெரிய மாறுதல் தெரிகிறது. அவரது நட்பு வட்டத்தில் எப்படியோ, ஆனால் பொது நிகழ்ச்சிகளில் அண்ணன் வெங்கட்பிரபுவை விட இங்கிதம் அறிந்து பேசியதை ‘பேய் பசி ‘( ப் வருமா வராதா?) முன்னோட்ட நிகழ்ச்சியில் கேட்க முடிந்தது.
“படத்தில் பெரிய ஹீரோவா,சின்ன ஹீரோவா, பட்ஜெட் பெரிசா,சிறிசா என்றெல்லாம் பார்க்கிறதில்ல. பணம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றியும் யோசிப்பதில்லை.அந்த யூனிட்டில் இருக்கிறவர்கள் அன்பானவர்களாக இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பேன்.அன்பு மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது. டி.வி.யை அதிகம் பார்ப்பதில்லை நெகட்டிவ் செய்திகளாகவே இருக்கிறது. எல்லா இடங்களிலும் அன்பு குறைகிறது.” என மிகவும் வருத்தப் பட்டார் .யுவன்.
இசைஞானியின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் தான் படத்தின் ஹீரோ ஹரி கிருஷ்ணன்.இவரைப் பற்றிய சுவையான செய்தியையும் சொன்னார் .
“சின்ன வயதிலேயே நடிக்கணும்கிற ஆசை ஹரிக்கு அதிகம். கோவிச்சுக்கிட்டு ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டான். அப்பாவோட நிகழ்ச்சிக்காக அங்க போயிருந்தபோதுதான் பார்த்து கூட்டிக்கிட்டு வந்தோம். இங்க வந்து நடிக்க முயற்சி பண்ணினான்.மறுபடியும் கோவிச்சிக்கிட்டு ஸ்ரீ லங்கா போயிட்டான்.யாழில் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பார்த்து கூட்டிக்கொண்டு வந்திட்டேன். அவன் நடிக்கிற படத்துக்கு நாந்தான் மியூசிக் போடணும்னு எங்களுக்குள்ள ஒப்பந்தம். அதுதான் இந்த படத்தின் வழியாக நிறைவேறி இருக்கு “என்றார் யுவன்.
கிருத்திகா உதயநிதி,சந்தோஷ் நாராயணன்,கார்த்திக் ராஜா ,வெங்கட் பிரபு ,ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பலர் பேசினார்கள்.
“ஒரேநாள் இரவில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடப்பதுதான் கதை. இது திரில்லர் மூவி”என்கிறார் இயக்குநர் சீனிவாஸ்.அதுதான் துணைக்கு பேய் இருக்கே!