கேரளாவில்,விடாமல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 256-க்கு மேல்என்கிறது அங்கிருந்து வரும் தகவல்,வெள்ளம் வடிந்த பிறகு, சரிந்துவிழுந்த நிலப்பரப்பைக் கிளறிப் பார்த்தால்தான் எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும்என்கிறது மற்றொரு தரப்பு . மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 58 அணைகள், நீர்வள ஆதார அமைப்பின்கீழ் 22 அணைகள் என மொத்தம் 80 அணைகள் கேரளாவில் உள்ளன. அனைத்து அணைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம், அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளம், திடீரென ஏற்படும் நிலச்சரிவு என ஒட்டுமொத்த மாநிலமும் துவம்சமாகிக் கிடக்கிறது. மத்திய அரசு மேலும் ரூ.500 கோடி நிதியை அறிவித்துள்ளது.இந்நிலையில்,நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை மூலம் கேரள மக்களுக்கு உதவி கோரியுள்ளார்.
” குழந்தை பருவத்தில் இருந்தே நான் “கடவுளின் தேசம்” எனப்படும் கேரளாவில் பிறந்தவன் என்பதிலும், அந்த கேரளா “இந்தியா” என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமை பட்டு கொண்டே இருப்பேன் என்பதில் ஐயமில்லை.ஆனால் இன்று அந்த அழகிய கேரளா வெள்ளத்தாலும், நில சரிவினாலும் கடுமையான பாதிப்பில் உள்ளது.பல நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமையை இழந்து கூரை இன்றி, உணவின்றி, அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். என் மாநிலத்தின் மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது.இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான். வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன்.இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து வீறு கொண்டு எழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் உடனடியான தேவைகள் அவசியம் என்பதால் தான் இந்த கோரிக்கை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவய பொருட்களை உடனடியாக கேரளா மக்களுக்கு அனுப்புங்கள். யார் மூலமாக என்பது முக்கியம் இல்லை, உடனடியாக வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். “கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும் ” என்கிற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்.எனஉருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.