அரசியல் களத்தில் கர்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதைப் போல ஒரு ‘மாயை’ இருந்தது உண்மைதான்!
ஏனெனில் அழகிரியின் சீற்றம், ஸ்டாலினின் சாதுர்யம் இரண்டும் மோதிக் கொள்கிறபோது யார் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது!
திமுகவில் அழகிரி இருந்தபோது அவரது சீற்றத்துக்கு பெரும் பலமாக இருந்தது கழகம்தான். அவர் கழகத்தை விட்டு கலைஞரால் நீக்கப்பட்டதும் கவசம் பறிபோனது. சீற்றமும் இற்றுப் போய் இருக்கிறது .
அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் அழகிரிக்கு மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள்.
அந்த விசுவாசம் நாளை மாறக்கூடும்.இன்னொருவரின் விசுவாசிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளமுடியும்.
அதிமுகவில் நடந்ததை நாடு பார்க்கவில்லையா என்ன? இன்று நடந்த அழகிரியின் அமைதிப் பேரணிக்கு அவர் சொன்னதைப் போல லட்சத்தில் தொண்டர்கள் வரவில்லை.ஆயிரத்தில் வந்தார்கள்.அத்தனை பேருக்கும் மாஸ்க் முகமூடி ! தேவையா என்ன?
முன்னர் அழகிரி அறித்திருந்ததைப் போல தந்தையின் நினைவிடத்தில் எத்தகைய ஆதங்கத்தையும் கொட்டவில்லை.
“கலைஞருக்கு மரியாதை செலுத்தவே இந்தப் பேரணி நடந்தது. வேறு நோக்கம் எதுவும் இல்லை” என்பதாக சுருக்கமாகச்சொன்னார். பேரணியில் பங்கேற்றவர்கள் ஒன்னரை லட்சம் என்பது அவரது கணக்கு. ஆனால் சில பத்திரிகையாளர்களின் கணக்கு சில ஆயிரங்களே ! அழகிரியின் எதிர்காலம் திமுகவிலா, அல்லது தனி முகாம் அமைப்பதா, இல்லையேல் ஏதாவது மாற்று இயக்கங்களிலா?