விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும்கட்சிக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இக்குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்தனர். தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக வன்முறை செய்யப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்,நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.